2016-08-10 16:49:00

லெபனான் அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க, ஒன்றுபடவேண்டும்


ஆக.10,2016. லெபனான் நாடு தன் அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க, அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வேறுபாடுகளை விடுத்து, ஒன்றுபடவேண்டும் என்று, மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutros Rai அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் அருகே ஆர்மேனிய மறைசாட்சி, அருளாளர் Ignatius Maloyian திருத்தலத்தை அர்ச்சித்த கர்தினால் Boutros Rai அவர்கள், கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக, லெபனான் நாடு அரசுத் தலைவரின்றி இருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி, தலைமைப் பணியில் உள்ள வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆர்மேனியாவில் நிகழ்ந்த இனப்படுகொலையின் நூற்றாண்டு, 2015ம் ஆண்டு கடைபிடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் Boutros Rai அவர்கள், தற்போது, மத்தியக் கிழக்கு நாடுகளில் நிகழ்வது, கிறிஸ்தவர்களுக்கு எதிரான மற்றொரு இனப்படுகொலை என்று கூறினார்.

ஆகஸ்ட் 7, இஞ்ஞாயிறன்று கூடிய 43வது பாராளுமன்றக் கூட்டத்தில், அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தேவையான வாக்குகள் இல்லாததால், பாராளுமன்ற அவை மீண்டும் செப்டம்பர் 7ம் தேதி கூடும் என்ற அறிவிப்புடன் கலைந்தது என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.