2016-08-10 17:09:00

சிங்கப்பூர், கருணையிலும் வளர வேண்டும் – பேராயர் கோ


ஆக.10,2016. சிங்கப்பூர் நாடு, பொருளாதாரத்திலும், தொழில் நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது, கருணையிலும், மற்றவர்களைப் புரிந்துகொள்வதிலும் வளர வேண்டும் என்று, சிங்கப்பூர் பேராயர் வில்லியம் கோ (William Goh) அவர்கள் தன் சுதந்திர தினச் செய்தியில் கூறியுள்ளார்.

1965ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி, மலேசிய நாட்டிலிருந்து, சிங்கப்பூர் விடுதலை பெற்றதன் நினைவாக, இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட 51வது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி, பேராயர் கோ அவர்கள் இச்செய்தியை வெளியிட்டார் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக பொருளாதாரம், தொழில் நுட்பம், வலுவான அரசு, வர்த்தகம் என்ற பல துறைகளில் சிங்கப்பூர் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டும் பேராயர் கோ அவர்கள், சொந்த நாட்டிலும், ஆசியாவின் ஏனைய நாடுகளிலும் உள்ள தேவைகள், சிங்கப்பூர் மக்களின் கவனத்தில் பதியவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பொருளாதார வறுமையை ஒழித்துவிட்ட சிங்கப்பூர், வேறு பல வறுமைகளில் சிக்கியுள்ளதை உணரவேண்டும் என்று கூறிய பேராயர் கோ அவர்கள், வயதில் முதிர்ந்தவர்கள், தனிமையில் விடப்பட்டு துன்புறுவது, இந்நாட்டில் நிலவும் வறுமையின் வெளிப்பாடு என்று சுட்டிக்காட்டினார்.

பல்வேறு வழிகளில் வாய்ப்புக்களை இழந்தோர், குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள், சிங்கப்பூர் சமுதாயத்தின் மையத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று, பேராயர் கோ அவர்களின் செய்தி வலியுறுத்துகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.