2016-08-10 15:13:00

இது இரக்கத்தின் காலம் : ஏழைகள் மீது இரக்கம் மிகுந்தால்...


சில வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக் கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதீர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்”என்றது. அதைக் கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப் பார். என் குட்டிகளுக்கு எது விருப்பமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச் சாப்பிடு, இதைச் சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம்” என்று காட்டமாய்ச் சொன்னது. சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில் ஒரு இலைதழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? ஆனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன. வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன. அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...?’ என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவைப் பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன. இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக்கூட இருக்கலாம்’என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன. ஆம். பசியாயிருக்கும் ஏழைகள் மீது இரக்கம் சுரக்கும்போது உணவுப்பொருள்கள் வீணாக்கப்படுமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.