2016-08-09 15:32:00

சிரியா, ஏமனில் போரின் ஆயுதம் பசி


ஆக.09,2016. உலகில் போர் இடம்பெறும் 17 நாடுகளில் வாழ்கின்ற ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்கள், கடும் உணவுப் பற்றாக்குறையால் துன்புறுகின்றனர் என்று, ஐ.நா. நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஏமன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்க்கு, அதாவது ஒரு கோடியே நாற்பது இலட்சம் பேருக்கும், சிரியா மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினருக்கு, அதாவது  87 இலட்சம் பேருக்கும் உடனடியாக உணவு, ஊட்டச்சத்துகள் மற்றும் வாழ்வாதாரங்கள் தேவைப்படுகின்றன என்று ஐ.நா. நிறுவனங்கள் கூறுகின்றன.

இதேபோல், 2009ம் ஆண்டிலிருந்து போக்கோ ஹாரம் இஸ்லாம் தீவிரவாதிகளின் எழுச்சியால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியாவிலும் ஐம்பது இலட்சம் பேர், கடும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் என்று, ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமும், உலக உணவு திட்ட நிறுவனமும் எச்சரித்துள்ளன.

இதற்கிடையே, சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் கடும் சண்டை நடந்து வருகிறது. இது, ஐந்தாவது ஆண்டாக அந்நாட்டில் கடும் சண்டை இடம்பெறுவதன் அடையாளமாக உள்ளது என்று கூறப்படுகின்றது.

இதுவரை சிரியாவில், 2,80,000த்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.