2016-08-06 16:32:00

பொதுக்காலம் - 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


பிரேசில் நாட்டு ரியோ தெ ஜனெய்ரோ மாநகரில், ஒலிம்பிக் விளையாட்டுக்கள், பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் ஆரம்பமாகியுள்ளன. ஆகஸ்ட் 3, கடந்த புதனன்று, தன் மறைக்கல்வி உரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த விளையாட்டுக்களில் கலந்துகொள்வோருக்கும், இதை ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, ஒரு சில கருத்துக்களையும் கூறினார்:

“அமைதி, சகிப்புத்தன்மை, ஒப்புரவு ஆகிய உயர்ந்த பண்புகளுக்காக ஏங்கியிருக்கும் இவ்வுலகிற்கு, நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நம்பிக்கையைக் கொணரட்டும். பதக்கங்கள் வெல்வதைவிட, தோல் நிறம், கலாச்சாரம், மதம் என்ற எல்லைகளைக் கடந்து, நாம் அனைவரும், ஒரே மனிதக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்ற உணர்வை வளர்ப்பதை, தங்கள் இலக்காகக் கொள்வதே, வீரர்களுக்கும், இவ்வுலகிற்கும் அவசியமானத் தேவை” என்று திருத்தந்தை கூறினார்.

206 நாடுகளை சேர்ந்த 11,000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் இந்த விளையாட்டுக்கள், எவ்வித ஆபத்தும் இன்றி, நல்ல முறையில் முடிவடைய இறைவனின் பாதுகாப்பை மன்றாடுவோம். ஒரு விளையாட்டு விழாவிற்கு இவ்வளவு பாதுகாப்பு தரவேண்டியுள்ளதே என்ற எண்ணம், வேதனையைத் தூண்டுகிறது. எந்நேரத்தில், எவ்விடத்தில், எவ்வகையில் வன்முறைகள் வெடிக்கும் என்பது தெரியாமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.

இந்த வன்முறைகளில் பல, மதத்தின் பெயரால் நிகழ்வதால், இவற்றை மதப் போர்களாக எண்ணிப் பார்க்கிறோம். ஜூலை 26, பிரான்ஸ் நாட்டில் 86 வயது நிறைந்த Jacques Hamel என்ற அருள்பணியாளர், திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த வேளையில், இரு இளையோரால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவ்விளையோருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்த வன்முறை நிகழ்ந்ததற்கு அடுத்தநாள், ஜூலை 27, போலந்து நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானப் பயணத்தில், தன்னுடன் பயணித்த ஊடகவியலாளர்களுடன் ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். பிரான்ஸ் நாட்டில், அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள் கொல்லப்பட்டது உட்பட, தற்போது உலகின் பல நாடுகளில் நிகழும் வன்முறைகளை, ஒரு போருக்கு ஒப்புமைப்படுத்திப் பேசினார், திருத்தந்தை:

“நாம் தற்போது சந்தித்துவருவது, மத அடிப்படையில் உருவாகும் போர் என்பதுபோல் பேசப்பட்டாலும், இது உண்மையிலேயே அதிகாரப் பேராசையினால் உருவாக்கப்படும் போர். பணம், இயற்கை வளங்கள், மக்களை அடக்கியாளும் அதிகார ஆசை என்ற காரணங்களே போர்களாக உருவாகின்றன. எல்லா மதங்களும் அமைதியை விரும்புகின்றன; ஆனால், அதிகார ஆசை கொண்ட மனிதர்களோ போரை விரும்புகின்றனர். பிரான்ஸ் நாட்டில், திருப்பலியில், அமைதிக்காக செபித்துக் கொண்டிருந்த வேளையில், அருள் பணியாளர் கொல்லப்பட்டிருப்பது, தற்போது நிலவும் அதிகாரப் பேராசையின் ஒரு வெளிப்பாடு” என்று பேசினார் திருத்தந்தை.

ஜூலை 31, கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போலந்து நாட்டிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பி வந்த வழியில், பயங்கரவாதத்தை இஸ்லாமிய மதத்தோடு தொடர்புப்படுத்தி குற்றம் சாட்டுவது தவறு என்பதை வலியுறுத்திக் கூறினார். சமூக அநீதிகளும், மனிதரைவிட பணத்தைப் பெரிதாக எண்ணி வழிபடும் போக்கும், பயங்கரவாதத்தை வளர்க்கும் முக்கிய காரணங்கள் என்று கூறியத் திருத்தந்தை, இளையோருக்கு போதிய நன்னெறி வழிகளையும், பொருளாதார வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுக்காதிருப்பது, பயங்கரவாதக் குழுக்களுக்கு அவர்களை இட்டுச்செல்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

நமது பேராசையும், சுயநலமும் கட்டுப்பாடின்றி வளர்ந்துவிட்டதால், இருப்பவர்கள் தேவைக்கும் அதிகமாக, மிகமிக அதிகமாகச் சேர்த்துக்கொண்டே உள்ளனர். சேகரித்து, குவித்துவைக்கும் வியாதிக்கு உட்பட்ட செல்வந்தர்களையும், அரசியல்வாதிகளையும் நாம் நன்கு அறிவோம். இதனால், இல்லாதவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் இழந்து தவிக்கின்றனர். இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு பெரும் பாதாளம் உருவாகிவிட்டது. இந்த வேறுபாடுதான் நமக்குள் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிவிட்டது. இல்லாதவர்கள், விரக்தியின் எல்லைக்கு விரட்டப்படும்போது, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படும்போது, அவர்களுக்கு உள்ள ஒரே வழி, இருப்பவர்களைத் தாக்குவது.

நாடுகளுக்கிடையில், சமுதாயங்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையில் வெடிக்கும் வன்முறைகள் பலவற்றின் ஆணிவேராக நாம் காண்பது... இருப்பவர் - இல்லாதவர் என்ற இணைக்கமுடியாத இருவேறு உலகங்கள். இப்படிப் பிளவுபட்டு நிற்கும் இந்த உலகங்களை இணைக்கும் வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, இல்லாதவரின் உலகிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இருப்பவரின் உலகம் ஆயுதங்களையும், அரசியல் தந்திரங்களையும் நம்பி வாழ்கிறது.

பேராசையின் உயிர் மூச்சாய் இருப்பது, பணம். பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும், பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற பழமொழிகளை அடிக்கடி கூறி, பணத்திற்கு ஏறத்தாழ ஒரு தெய்வீக நிலையை அளித்து வருகிறோம். பணமும், செல்வமும் தம்மிலேயே தீமைகள் அல்ல. அவற்றைத் திரட்டுவதிலும், குவித்து வைப்பதிலும் நாம் காட்டும் அரக்கத்தனமான சுயநலமே, செல்வத்தை தீயதாக்கி விடுகிறது. தானியங்களைச் சேர்த்து, குவித்து வைத்த ஓர் அறிவற்ற செல்வனைப் பற்றி சென்ற ஞாயிறன்று ஓர் உவமை வழியாக இயேசு எச்சரிக்கை விடுத்தார். இன்றைய நற்செய்தியில், செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளை நம் அனைவருக்கும் தருகிறார் இயேசு. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளைக் கேட்போம்:

லூக்கா நற்செய்தி 12: 33-34

உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

திருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம் சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக்கூடும் என்று நாம் சிந்திக்கும்போது, அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்கப்படும் கறுப்புப் பணம் நம் உள்ளத்தை இருளாய் கவ்வுகின்றது. திருட்டு, பூச்சி இவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சட்டம், வரி இவற்றிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற, இந்தியச் செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பல செய்திகளாக, நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நூல், நமது சிந்தனைகளுக்கு மிகவும் துணையாக இருக்கும்.

2009ம் ஆண்டு வெளியான இந்நூலில், தவறான வழிகளில், தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைத்துள்ள இந்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பெரும் செல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர் நடிகைகள்  என்ற ஒரு பெரும் படையினர், பல ஆண்டுகளாய் செய்து வந்துள்ள ஓர் அக்கிரமம் அலசப்பட்டுள்ளது. இந்நூலின் தலைப்பு: இந்தியாவில் திருடி, அயல்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள செல்வம். இதை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வருவது எப்படி? (Stolen Indian Wealth Abroad – How to Bring it back? A compilation of articles by Dr R Vaidyanathan, Sri.S.Gurumurthy, Sri.M.R.Venkatesh, and Sri.Arun Shourie, May 2009)

செல்வத்தைத் தவறான வழிகளில் சேர்ப்பதும், குவிப்பதும் இந்தியாவில் மட்டும் நிலவும் குற்றம் என்று தவறாகக் கணக்கு போடவேண்டாம். இத்தகையக் குற்றவாளிகள் உலகின் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். இப்படி தவறான வழிகளில் தவறான இடங்களில் குவிக்கப்பட்ட செல்வங்களால், உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் சரிவைச் சந்திக்க வேண்டியிருந்தது. இச்சீரழிவு, உலகை உலுக்கி எடுத்தபோதுதான், அரசுத் தலைவர்கள், கறுப்புப் பணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள் பலரும் இக்குற்றத்தைத் தடுக்கும் வழிமுறைகளைத் தீவிரமாகச் சிந்தித்தபோது, இந்தியத் தலைவர்கள் அதைப் பற்றி அதிக அக்கறை காட்டவில்லை.

இந்தியத் தலைவர்களுக்கோ, உலகத் தலைவர்களுக்கோ கறுப்புப் பணம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. 2005ம் ஆண்டு கறுப்பு, அழுக்குப் பணத்தைப் பற்றி Raymond W. Baker என்பவர் ஒரு நூலை (Capitalism's Achilles Heel) வெளியிட்டார். Bakerன் கணிப்புப்படி, 2001ம் ஆண்டில் உலகில் இருந்த கறுப்புப் பணத்தின் மதிப்பு 11.5 டிரில்லியன் டாலர்கள். இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் ஒரு டிரில்லியன் டாலர் அதிகமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். Raymond W Bakerன் கணக்குப்படி, உலகில் தற்போது குவித்து வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு, குறைந்தது, 25 டிரில்லியன் டாலர்கள்!

ஒரு டிரில்லியன் டாலர் என்பது எவ்வளவு பெரியத் தொகை? விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்தப் பணத்தில் நீங்கள் ஒரு மில்லியன், அதாவது, பத்து லட்சம் டாலர்கள் ஒவ்வொரு  நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு செய்து முடிக்க, பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740 ஆண்டுகள் ஆகும்.

விளையாட்டுச் சிந்தனையை ஒதுக்கிவிட்டு, சமுதாய அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்றால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் என்ற வளரும் நாடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு ஒரு டிரில்லியன் டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் ஓராண்டுக்கு மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழ முடியும். அந்த அளவுக்குப் பணம் இது.

ஒரு டிரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, இவ்விதம் மக்கள் வாழ்வோடு, அதுவும் ஏழை மக்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் அந்தப் பணத்தின் மதிப்பு தெரியும். அதற்குப் பதில், இந்தப் பணம் வங்கிகளில் குவிந்திருந்தால், வெறும் பூஜ்யங்களாய்தான் இருக்கும்.

பணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து வைக்கப்பட்டிருக்கும்போது, அது நாற்றம் எடுக்கும். அதிக நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம் தன் சக்தியையும், பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில் பரப்பப்படும்போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று, நாற்றம் எடுக்கும் அளவுக்கு ஒரு டிரில்லியன் டாலர்கள் ஒவ்வோர் ஆண்டும் பற்பல அயல்நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாய் குவிக்கப்படுகிறது.

Raymond W Baker மற்றொரு வேதனை தரும் உண்மையையும் தன் நூலில் கூறியுள்ளார். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு டிரில்லியன் டாலர் கறுப்புப் பணத்தில், பாதிக்குப் பாதி, அதாவது, 500 பில்லியன் டாலர்கள் வளரும் நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்படுகின்றன என்றும் Raymond W Baker கூறியுள்ளார். ஏழைகளின் உழைப்பை அநீதமான வழிகளில் உறிஞ்சி, உலகெங்கும் குவிக்கப்பட்டு நாற்றமெடுத்திருக்கும் 25 டிரில்லியன் டாலர்கள், உலகில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது யாரிடமும் கையேந்தி தர்மம் கேட்காமல், நல்ல உடல், உள்ள நலனோடு வாழ முடியும். எவ்வளவு அழகான கற்பனை இது! வெறும் கற்பனை அல்ல, முயன்றால் நடைமுறையாகக்கூடிய ஓர் உண்மை! உலகில் எந்த ஒரு மனிதரும் அடுத்தவரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு பத்து ஆண்டுகள் வாழமுடிந்தால், இவ்வுலகம் விண்ணுலகம்தானே. இதைத்தானே இயேசுவும் ‘விண்ணுலகில் குறையாத செல்வத்தைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

Ernest Hemingway என்பவர் நொபெல் பரிசு பெற்ற ஒரு பெரும் எழுத்தாளர். அவரிடம்  தனித்துவமிக்கதொரு பழக்கம் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருட்களை அவர் பிறருக்குப் பரிசாகத் தருவாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர், "இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றுக்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றுக்கு நான் அடிமை." என்று பதில் சொன்னாராம்.

தன் சொத்துக்கு அடிமையாகி, அறிவற்றுப் போன செல்வன் உவமையைச் சொன்ன இயேசு, சென்ற வாரம் நமக்குத் தந்த எச்சரிக்கை இதுதான்: “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.” லூக்கா 12: 15

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இயேசு, வானத்துப் பறவைகளையும், வயல்வெளி மலர்களையும் பார்த்து, பாடங்கள் பயில நம்மைப் பணிக்கிறார். (லூக்கா 12: 24-28) இறைவனின் பராமரிப்பை நம்பி அவை வாழ்கின்றன என்பதை ஒரு பாடமாக இயேசு தந்தாலும், பறவைகளும், மலர்களும் சொல்லித் தரும் மற்றொரு பாடமும் மனிதர்களாகிய நமக்கு இன்று மிகவும் தேவையான ஒரு பாடம். அதுதான், பகிர்வு. வானத்துப் பறவைகளிடம் பகிர்ந்துண்ணும் பழக்கம் உண்டு என்பதை அறிவோம். மலர்களோ, தன்னிடம் உள்ள நறுமணத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றன. இந்தப் பகிர்வையே, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக நாம் கேட்டோம்:

லூக்கா நற்செய்தி 12: 33-34

உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

தர்மத்தில், பகிர்வில் இவ்விதம் வளரும் உலகம், பாதுகாப்பிலும் அதிகம் வளரும். அந்த உலகில், மக்கள் கூடிவரும் இடங்கள், விளையாட்டு விழாக்கள், இன்னும் பல விழாக்கள் அனைத்தும் பாதுகாப்புப் படைகள் இல்லாமலேயே பாதுகாப்புடன் நடைபெறும். அந்த சுதந்திர மண்ணகத்தை உருவாக்க இறைவன் நம் அனைவருக்கும் துணைபுரியட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.