2016-08-06 17:41:00

எத்தியோப்பிய வறட்சியிலிருந்து மக்களைக் காக்கும் காரித்தாஸ்


ஆக.06,2016. எத்தியோப்பியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள், நீர், மற்றும் உணவு பற்றாக்குறையால் துன்புறுவதாக ஐ.நா. நிறுவனம் தன் அச்சத்தை வெளியிட்டுள்ளதையொட்டி, அடுத்த நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டு வருவதாக, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

போதிய நீர் இல்லாமையால், எத்தியோப்பியாவில், பெரும் எண்ணிக்கையில் கால்நடைகள் உயிர் இழந்துள்ள நிலையில், முக்கிய நீர் விநியோக அமைப்பு முறைகளை புதுப்பிக்க சுவிட்சர்லாந்து காரித்தாஸ் அமைப்பு முன் வந்துள்ளது.

கென்யா, சோமாலியா ஆகிய நாடுகளிலும் வறட்சி அதிகரித்துள்ளதையொட்டி, ஆப்ரிக்க நாடுகளுக்கு, 20 இலட்சம் சுவிஸ் பிராங்குகளை சுவிட்சர்லாந்து கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு ஏற்கனவே வழங்கியுள்ளது.

குழந்தைகளுக்கு உணவு, விவசாயிகளுக்கு விதை, கால்நடைகளுக்கு தடுப்பூசி, பொது மக்களுக்கு மருத்துவ உதவிகள் என பல்வேறு திட்டங்களுடன் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, ஆப்ரிக்க மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறது.

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.