2016-08-05 15:53:00

ஒலிம்பிக்கில், புலம் பெயர்ந்த வீரர்கள் தரும் நம்பிக்கை


ஆக.05,2016. வாழ்வில் கொடிய அனுபவங்களை அடைந்துள்ள நீங்கள், உலகின் பல்லாயிரம் மக்களுக்கு நம்பிக்கையாக விளங்குகிறீர்கள் என்று, ஐ.நா. பொதுச்செயலர், பான் கி மூன் அவர்கள், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் சிலரிடம் கூறினார்.

பிரேசிலின் ரியோ தெ ஜனெய்ரோவில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில், பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த வீரர்கள் 10 பேர், ஐ.நா.அவையின் கொடிக்குக் கீழ், ஒரு குழுவாக, இப்போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

இக்குழுவில் போட்டியிடும் வீரர்களை, இப்புதனன்று சந்தித்த பான் கி மூன் அவர்கள், உலகெங்கும் துன்புறும் 6 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயந்த மக்களின் நம்பிக்கை அடையாளமாக அவ்வீரர்கள் விளங்குகின்றனர் என்று கூறினார்.

தென் சூடான், சிரியா, காங்கோ குடியரசு, மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள், ஐ.நா. அவையின் கொடியை ஏந்தி, ஒலிம்பிக் துவக்க விழாவில் வலம்வருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் கவனமனைத்தும் ரியோ நகரை நோக்கித் திரும்பியிருக்கும் இவ்வேளையில், இந்தப் பத்து வீரர்கள், உலகெங்கும் நம்பிக்கையிழந்துள்ள பல கோடி இளையோருக்கு நம்பிக்கை தரும் அடையாளங்களாக அடுத்த இரு வாரங்கள் திகழ்வர் என்று ஐ.நா.பொதுச் செயலர் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.