2016-08-04 15:41:00

கந்தமால் கிறிஸ்தவர்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை


ஆக.04,2016. ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் நடைபெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கு அம்மாநில அரசு வழங்கியுள்ள இழப்பீட்டுத் தொகையை கூடுதலாக வழங்கவேண்டும் என்று இந்தியாவின் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, இந்து அடிப்படைவாத கும்பலால் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கடுமையான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒடிஸ்ஸா மாநில அரசு 2011ம் ஆண்டு வழங்கிய இழப்பீட்டுத் தொகை போதாது என்று, கட்டக் புவனேஸ்வர் முன்னாள் பேராயர் ரபேல் சீனத் அவர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், இச்செவ்வாயன்று வழங்கிய தீர்ப்பில், ஒடிஸ்ஸா அரசு, இவர்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கூறியுள்ளனர்.

கூடுதல் தொகை எவ்வளவு என்பதில் தெளிவில்லை என்றாலும், உச்சநீதி மன்றம், இம்மக்களின் சார்பில் தீர்ப்பு வழங்கியிருப்பது நம்பிக்கை தரும் செயல் என்று, இம்மக்களுக்காக போராடி வரும் அருள்பணி அஜய் குமார் சிங் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

2008ம் ஆண்டு, கந்தமால் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த வன்முறையில் ஏறத்தாழ நூறு பேர் கொல்லப்பட்டனர், 415 கிராமங்களில், 5,600க்கும் அதிகமான வீடுகளும், 300க்கும் அதிகமான கோவில்களும் தீக்கிரையாக்கப்பட்டன, 55,000த்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டனர் என்று ஆசிய செய்தி, புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.