2016-08-04 14:57:00

இலத்தீன் அமெரிக்க இளையோர் விழித்தெழ ஓர் அழைப்பு


ஆக.04,2016. பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் அடுத்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள், பானமா இளையோர் மட்டுமல்லாமல், இலத்தீன் அமெரிக்க நாடுகளின் அனைத்து இளையோரும் விழித்தெழுவதற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று பானமா நாட்டு கர்தினால் ஒருவர் கூறினார்.

கடந்த ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட தாவீது உயர் மறைமாவட்டப் பேராயர், கர்தினால் José Luis Lacunza Maestrojuán அவர்கள், பானமா நாடு, செல்வம் கொழிக்கும் நாடு இல்லையெனினும், உலக இளையோர் நாள் நிகழ்வுகளை  சிறப்புறச் செய்யும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.

வறுமையின் பிடிகளில் சிக்கி, பல்வேறு தவறான பாதைகளை நோக்கி ஈர்க்கப்படும் பானமா நாட்டு இளையோருக்கு, 2019ம் ஆண்டு நிகழவிருக்கும் உலக இளையோர் நாள் நேர்மறையான, ஆக்கப்பூர்வமான வழிகளைத் திறந்துவிடும் என்று தான் நம்புவதாக, பானமா பேராயர், José Domingo Ulloa அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

1513ம் ஆண்டு, அமெரிக்கக் கண்டத்தில் நிறுவப்பட்ட முதல் மறைமாவட்டம் என்ற பெயர் பெற்றது பானமா என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் Ulloa அவர்கள், அங்கிருந்து பரவிய கத்தோலிக்க மறை, தற்போது அதிக அளவில் வளர்ந்துள்ள ஒரு கண்டமாக அமெரிக்காவை மாற்றிவிட்டது என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.