2016-08-04 16:02:00

இலங்கையில் அனைத்து மதத்தினருக்கும் சமமான உரிமைகள்


ஆக.04,2016. இலங்கையில் உருவாகிவரும் புதிய சட்டத் திருத்தங்கள் அனைத்து மதத்தினருக்கும் சமமான உரிமைகளை வழங்கும் சட்டங்களாக இருக்கவேண்டும் என்று, இலங்கை கத்தோலிக்கரும், மனித உரிமை ஆர்வலர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று UCAN செய்தி கூறுகிறது.

மத சார்பற்ற நாடு என்றால், மத நம்பிக்கையற்ற நாடு என்று பொருளல்ல, மாறாக, அனைத்து மதத்தினரும் பாகுபாடு இன்றி, தங்கள் மத உரிமைகளைக் கொண்டிருக்க வழி செய்யும் முறை என்று, மனித உரிமைகளுக்காக போராடிவரும் அருள்பணி Sarath Iddamalgoda அவர்கள், UCAN செய்தியிடம் கூறினார்.

அனைவரின் மத உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்றும், புத்த மதம் அரசு மதமாக செயலாற்றக் கூடாது என்றும் கூறி, மனித உரிமை ஆர்வலர்களும், கத்தோலிக்கர்களும் இணைந்து இலங்கை அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள வட இலங்கையில், கிறிஸ்தவம், இந்து ஆகிய மதங்களும், புத்த மதத்திற்கு ஈடான உரிமைகளை பெறுவதற்கு, இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி அமைதி பணிக்குழுவின் தலைவர், அருள்பணி மங்களராஜா அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.