2016-08-03 14:48:00

ரியோ ஒலிம்பிக் வீரர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துக்கள்


ஆக.03,2016. அமைதி, சகிப்புத்தன்மை, ஒப்புரவு ஆகிய உயர்ந்த பண்புகளுக்காக ஏங்கியிருக்கும் இவ்வுலகிற்கு, நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நம்பிக்கையைக் கொணரட்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கோடை விடுமுறையையொட்டி, கடந்த சில வாரங்களாய் நடைபெறாமலிருந்த புதன் மறைக்கல்வி உரைகளை மீண்டும் இப்புதனன்று, வத்திக்கான் அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் துவக்கியத் திருத்தந்தை, ரியோ தெ ஜனெய்ரோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கென, அந்நகரில் கூடியுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார்.

ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்துகொள்ளும் வீரர்கள், பதக்கங்கள் வெல்வதைவிட, தோல் நிறம், கலாச்சாரம், மதம் என்ற எல்லைகளைக் கடந்து, நாம் அனைவரும், ஒரே மனிதக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்ற உணர்வைப் பெறுவதை, தங்கள் இலக்காகக் கொள்வது, இவ்வுலகிற்கு அவசியமான ஒரு தேவை என்று கூறினார், திருத்தந்தை.

பிரேசில் நாட்டு மக்கள், தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சனைகளை வென்று, உலக மக்களை வரவேற்று, அவர்களை தங்களுக்கே உரிய விரும்தோம்பல் வழியே மகிழ்விப்பார்கள் என்ற தன் நம்பிக்கையை, தன் வாழ்த்துக்களில் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.