2016-08-03 15:41:00

பானமா தலத்திருஅவை தன் பணிகளைத் துவக்கிவிட்டது


ஆக.03,2016. ஜூலை 31, கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களுக்கு பானமா நாட்டை அறிவித்ததும், பானமா தலத்திருஅவை தன் பணிகளைத் துவக்கிவிட்டது என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

‘மத்திய அமெரிக்க மக்களின் பாலம்’ என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று வெளியான ஒரு கட்டுரையில், பானமா தலத்திருஅவையின் சார்பில், பேராயர் José Domingo Ulloa Mendieta அவர்கள், உலக இளையோருக்கு விடுத்துள்ள அழைப்பு, தலத்திருஅவை இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பானமா நாட்டின் பெரும்பான்மை மக்கள் கத்தோலிக்கர்கள் என்றாலும், இந்நாட்டில்  உள்ள பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களும் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வர் என்று, பேராயர் Mendieta அவர்கள், கூறியுள்ளார்.

1983ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், பானமா நாட்டிற்கு, தனது 17வது பயணத்தை மேற்கொண்டார் என்றும், அதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கு செல்லும் இரண்டாவது திருத்தந்தை என்றும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை வட மற்றும் தென் அமெரிக்காவில், புவனோஸ் அயிரெஸ், டென்வர், டொரான்டோ, ரியோ தெ ஜனெய்ரோ ஆகிய நான்கு நகரங்களில் உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன என்றும், பானமாவில் நடைபெறவிருப்பது, அமெரிக்கக் கண்டத்தில் 5வது உலக இளையோர் நாள் என்றும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.