2016-08-03 16:01:00

ஆகஸ்ட் 15, பிரான்சில் அமைதி, பாதுகாப்புக்கென வழிபாடுகள்


ஆக.03,2016. இம்மாதம் 15ம் தேதி, கொண்டாடப்படும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, பிரான்ஸ் நாட்டின் அனைத்து ஆலயங்களிலும், நாட்டின் அமைதி, பாதுகாப்பு இவற்றை மையப்படுத்தி திருப்பலிகளும், வழிபாடுகளும் மேற்கொள்ளும்படி, அந்நாட்டு ஆயர் பேரவை விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பிரான்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர், Georges Pontier அவர்கள் அனுப்பியுள்ள இந்த விண்ணப்ப மடலில், பிரான்ஸ் நாடு அண்மையில் அடைந்த தாக்குதல்கள், நமது ஒருங்கிணைந்த செபத்திற்கு அழைப்பு விடுக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

நாம் அடைந்துவரும் நெருக்கடிகளில் இறைவன் நம் நாட்டைக் காப்பாராக என்று கூறியுள்ள பேராயர் Pontier அவர்கள், ஆகஸ்ட் 15ம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் கோவில் மணி ஒரே நேரத்தில் ஒலிக்கவேண்டும் என்ற சிறப்பு அழைப்பையும் விடுத்துள்ளார்.

1638ம் ஆண்டு, அரசர், 13ம் லூயிஸ், பிரான்ஸ் நாட்டை, அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்ததைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும், விண்ணேற்புப் பெருவிழாவன்று, தலத்திருஅவை பல்வேறு கருத்துக்களுக்காக பிரான்ஸ் நாட்டு கத்தோலிக்கர்களை இணைத்து வந்துள்ளது என்பதும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ பிரான்ஸ் தலத் திருஅவை இணைந்து செபித்தது என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.