2016-08-02 16:13:00

பெண் தியாக்கோன்கள் குறித்து ஆராய திருப்பீடத்தில் புதிய அவை


ஆக.,02,2016. திருஅவையில் பெண்களை தியாக்கியோன்களாக நியமிப்பது குறித்து ஆய்வு செய்வதற்கு, புதிய அவை ஒன்றை, இச்செவ்வாயன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏற்கனவே, இவ்வாண்டு மே மாதம் 12ம் தேதி, வத்திக்கானில், உலக பெண் துறவு சபைகளின் உலகத்தலைவர்களைச் சந்தித்த திருத்தந்தை, திருஅவையில் பெண் தியாக்கோன்களை நியமிப்பது குறித்து ஆராயப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், இச்செவ்வாயன்று இப்புதிய அவை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பேராயத்தின் செயலர், இயேசு சபை பேராயர் Luis Francisco Ladaria Ferrer அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய அவையில், வத்திக்கான், இத்தாலி, இஸ்பெயின், பெல்ஜியம், ஆஸ்திரியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளிலிருந்து, ஆறு அருள்பணியாளர்கள், இரு அருள்கன்னியர்கள், 4 பெண் பேராசிரியர்கள் என 12 பேர் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'மகிழ்வின் இரகசியம்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேர்மறை ஆர்வங்களை முடக்கிப் போடாதீர்கள், வாழ்வில் ஈடுபாடு கொள்ளுங்கள், ஏனெனில் வாழ்வு என்பது வாழவேண்டியது என கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.