2016-08-02 16:06:00

குழந்தை தொழிலாளரை பணி அமர்த்தினால் சிறை


ஆக.,02,2016. குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு, இரண்டாண்டு வரை சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது.

குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு தண்டனை வழஙகும் வகையில், குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில், மத்திய அரசு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதற்கு, குடியரசுத் தலைவர், பிரணாப் முகர்ஜி அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இப்புதிய சட்டத்தின்படி, குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு, ஆறு மாதங்கள் முதல், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

விளம்பரங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளிட்டவற்றில் குழந்தைகளை நடிக்க வைக்கவும், குரல் கொடுக்க வைக்கவும், தடை ஏதுமில்லை எனவும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தங்கள் வீடுகளில் வேலைகள் செய்வதை, இந்த சட்டம் கட்டுப்படுத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Dinamalar /வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.