2016-08-01 17:10:00

பழைய நினைவுகளுடன் வருங்காலத்தை நோக்கிய நம்பிக்கை


ஆக.01,2016. 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளையொட்டி போலந்தில் 5 நாள் திருத்தூதுப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிலிருந்து விடைபெற்று, ஞாயிறு இரவு வத்திக்கான் திரும்பினார்.

ஞாயிறு மாலை நிகழ்வாக, இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க உதவிய சுய விருப்பப் பணியாளர்களை சந்தித்து அவர்களுக்கு நன்றியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களின் தாராளமனம், அர்ப்பணம், விசுவாசம் ஆகியவை, திருஅவையின் எதிர்காலமாக இருக்கும் இளையோருக்கு பெருமளவில் உதவியுள்ளது என்றார்.

சுய விருப்பப் பணியாளர்கள், மற்றும் இந்த இளையோர் தின கொண்டாட்டங்களை ஏற்பாடுச் செய்தவர்களுக்கென தான் தயாரித்து வைத்திருந்த 5 பக்க உரையை இந்த ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான ஆயரிடம் ஒப்படைப்பதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பானிய மொழியில் அவர்களிடம் மனம்திறந்து பேசினார்.

ஒவ்வொருவரும் தங்கள் குடும்பம், வரலாறு போன்றவற்றின் கடந்த கால நினைவுகளுடனும், வருங்காலம் குறித்த நம்பிக்கைகளுடனும் வாழும்போது, நிகழ்காலத்திற்கும் ஒன்று தேவைப்படுகின்றது, அதுவே மனஉறுதி என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன உறுதியுடன், வாழ்வின் சாட்சிகளாக முன்னோக்கிச் செல்லுங்கள் என சுய விருப்பப் பணியாளர்களை நோக்கி ஊக்கமளித்தார்.

கடந்த கால நினைவுகளைச் சுமந்து செல்லும் நாம், நம் தாத்தா பாட்டிகளின் அனுபவங்களுக்கு செவிமடுத்து அவர்களுடன் உரையாடல் நடத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக இளையோர் நாள் சுய விருப்பப்பணியாளர்களுடன் மேற்கொண்ட சந்திப்புக்குப் பின், உள்ளூர் நேரம் மாலை 6.30 மணிக்கு அந்நாட்டிலிருந்து விடைபெற்று, போலந்து விமானத்தில், திருத்தந்தை புறப்படுவதாக ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த நிலையில், பெருமழை பெய்ததால், விமானம் ஒருமணி நேரம் காலதாமதமாகப் புறப்பட்டு, உரோம் நேரம் 9.34 மணிக்கு ஃப்யூமிச்சீனோ விமானத் தளம் வந்தடைந்தது. 

இத்தாலிக்கு வரும் வழியில் விமானம் கடந்துவந்த, போலந்து, ஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, குரோவேஷியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கு விமானத்திலிருந்தே வாழ்த்துத் தந்திகளையும் அனுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.