2016-08-01 16:47:00

உணவை விட வேலை வாய்ப்பே இன்றைய தலைமுறைக்குத் தேவை


ஆக.01,2016. அர்ஜென்டினா நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் அகஸ்ட் 7ம் தேதி சிறப்பிக்கப்படும் புனித கயத்தானோ திருவிழாவையொட்டி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை இத்திங்களன்று அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டினா தலைநகர் Buones Airesல் சிறப்பிக்கப்படும் இத்திருவிழாவில், அந்நகர் பேராயராக தான் கலந்து கொண்டதையும், எண்ணற்ற மக்களின் அனுபவப் பகிர்வுகளுக்கு செவிமடுத்ததையும் குறித்து, தன் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருநாளின்போது விசுவாசிகள் ஒன்றுகூடி புனித கயத்தானோவிடம், உணவுக்காகவும் வேலைக்காகவும் இறைஞ்சுவர் என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.

பல நல்ல உள்ளங்களால் ஏழைகளுக்கு உணவு கிடைக்கலாம், ஆனால், குழந்தைகளை காப்பாற்றத் துடிக்கும் தந்தை ஒருவர், வேலையில்லாமல் துயருறுவது கொடுமை எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

உணவு வழங்குவது மற்றவரின் பிரச்னைக்கு ஓரளவு தீர்வைத் தரலாம், ஆனால், வேலையே ஒருவர் மாண்புடன் செயல்பட உதவும், எனவே அர்ஜென்டினா நாட்டின் அனைத்து ஆயர்களும், துன்புறும் மக்களின் அருகாமையில், அன்புடனும், செபத்துடனும் இருக்குமாறு விண்ணப்பிப்பதாகவும், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.