2016-07-31 16:40:00

சோஃபாவுக்குப் பதிலாக, இளையோருக்கு காலணிகள் தேவை


ஜூலை,31,2016. இளையோர் திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தையின் உரை:  

அன்பு இளைய நண்பர்களே, மாலை வணக்கம்! இந்த மன்றாட்டு திருவிழிப்பில் உங்களோடு இருப்பதில் மகிழ்கிறேன்! இளம்பெண் Rand Mittri அவர்கள், தன் பகிர்வின் இறுதியில், "என் அன்புக்குரிய நாட்டிற்காக செபிக்குமாறு உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார். போர், துன்பம், இழப்பு என்று அவர் பகிர்ந்துகொண்ட அனுபவம், நம் செபத்திற்காக விண்ணப்பித்தது. இந்தத் திருவிழிப்பை செபத்துடன் துவங்குவதை விட சிறந்த வழி இருக்கமுடியுமா?

நாம் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் கொண்ட நாடுகளிலிருந்து வந்திருக்கிறோம். நம்மில் சிலர் வாழும் நாடுகள், ஒன்றுக்கொன்று மோதல்களில் ஈடுபட்டுள்ள நாடுகளாகவும் இருக்கலாம். வேறு சிலர், அமைதியில் இருக்கும் நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். ஆனால், நம் அனைவருக்கும் போர் என்பது வெறும் செய்தி அல்ல, மாறாக, நம் சொந்த அனுபவமாக மாறிவருகிறது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் முகமும் முகவரியும் உடையவர்கள். இளம்பெண் Randன் அனுபவத்தைப் போல, சிரியா நாட்டின் போரினால் துன்பம் அடைந்துள்ளோர் பலர்.

நாம் காணும் போர், தொலைக்காட்சி அல்லது கைப்பேசி திரைகளில் மட்டும் தோன்றும் போர் அல்ல. அது, நம்மைச் சூழ்ந்துள்ளது. இளம்பெண் Rand பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், நமது சகோதர சகோதரிகள் சாவினாலும், கொலையாலும் சூழப்பட்டுள்ளனர்.

அன்பு நண்பர்களே, போரினால் துன்புறும் அனைவருக்காகவும் செபிக்க நாம் இணைவோம். உடன்பிறந்தோரின் இரத்தத்தைச் சிந்துவதை எவ்வகையிலும் நாம் நியாயப்படுத்த முடியாது என்பதை புரிந்துகொள்வோம். வெளி உலகில் நடைபெறும் போரினால் துன்புறுவோருக்கு செபிக்கும் இதே வேளையில், Natalia, Miguel ஆகியோர் பகிர்ந்துகொண்ட உள்மனப் போர்களைக் குறித்தும் செபிப்போம். Natalia, Miguel, நீங்கள் இருவரும், இறைவனின் இரக்கம் ஒருவர் வாழ்வில் என்ன செய்யமுடியும் என்பதற்கு சான்றுகளாக வாழ்கிறீர்கள்.

வெறுப்பை வெறுப்பினாலும், வன்முறையை, வன்முறையாலும் வெல்வதற்கு நாம் விரும்பவில்லை. வெளியிலும், உள்ளும் நம்மைச் சூழ்ந்துள்ள போருக்கு நாம் தரும் ஒரே பதில், உடன்பிறந்த உணர்வு, குடும்பம் என்ற உணர்வு. "குடும்பம் என்பது அர்த்தமற்றது, நம் இல்லங்கள் உண்பதற்கும், உறங்குவதற்கும் தரப்பட்டுள்ள ஓர் இடம் மட்டுமே" என்று சொல்பவர்களுக்கு, இதோ, இவ்விடத்தில், உலகெங்கிலிருமிருந்து வந்து, ஒரே குடும்பமாக செபிப்பது ஒன்றே, நாம் தரும் பதில். எனவே, ஒரு குடும்பமாக நாம் இப்போது எழுந்துநின்று, ஒருவர் கரத்தை ஒருவர் பிடித்து, அனைவரும் இணைந்து, அமைதியில் செபிப்போம்.

இவ்வாறு திருத்தந்தை கூறியதும், வளாகத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரங்களை இணைத்து, அமைதியில் சில மணித்துளிகள் செபித்தனர். பின்னர், திருத்தந்தை தன் உரையைத் தொடர்ந்தார்.

நாம் இணைந்து செபித்த இவ்வேளையில், 'பெந்தக்கோஸ்து' நாளன்று கூடியிருந்த திருத்தூதர்களை எண்ணிப் பார்த்தேன். அச்சத்தால், கதவுகளை மூடி ஒளிந்துகொண்டிருந்த அவர்கள் நடுவே, அற்புதம் ஒன்று நிகழ்ந்தது. நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் வடிவில், தூய ஆவியார் அவர்கள் மீது வந்ததும், அங்கு ஒரு முழுமையான மாற்றம் நிகழ்ந்தது!

நாம் மூன்று சாட்சியங்களைக் கேட்டோம். அவர்கள் கூறிய வாழ்வு அனுபவங்கள் நம் உள்ளங்களைத் தொட்டன. இயேசுவின் சீடர்கள் உணர்ந்ததுபோலவே, இவர்களும் தங்கள் வாழ்வில் அனைத்தையும் இழந்துவிட்டதைப் போல் உணர்ந்தனர். சீடர்களைப் போல் இவர்களும் அச்சத்தால் சூழப்பட்டனர்.

அச்சம் நம்மில் என்ன செய்கிறது? கதவுகளை மூடச் சொல்கிறது. அச்சத்தின் இரட்டைப் பிறவியான, 'செயலற்ற நிலை' நம்மை ஆட்கொள்கிறது. செயலற்று போகும்போது, பிறரைச் சந்திப்பது, நட்பு கொள்வது, கனவுகளைப் பகிர்வது, பிறரோடு நடந்துசெல்வது போன்ற விடயங்கள் நம் வாழ்வில் தொலைந்து போகின்றன. நம்மை நாமே ஒரு சிறு கண்ணாடி அறைக்குள் பூட்டிக்கொள்கிறோம்.

வாழ்வில் மற்றொரு 'செயலற்ற நிலை' உண்டு. இது மிகவும் ஆபத்தான நிலை. நமது சுகம் 'சோஃபா'வில் உள்ளது என்று நம்பி வாழ்வதே இந்நிலை. இன்று உள்ள சில சோஃபாக்கள், நமக்கு 'மசாஜ்' செய்து உறங்க வைக்கும் சக்தி பெற்றவை.   

வீடியோ விளையாட்டுக்கள், கணணி திரைகள் என்று, நம்மைக் கட்டிப்போடும் சோஃபாக்களாக பல கருவிகள் உள்ளன. வீட்டை விட்டு வெளியேறாமல், எவ்வித பயமோ, துயரோ இன்றி வாழும் வாழ்க்கை - இவை அனைத்தும், 'சோஃபா சுகங்கள்'!

இவை மிக ஆபத்தானது. நம்மையும் அறியாமல் இவை நம்மை உறங்கச் செய்துவிடுகின்றன. 20 வயதில் பணிஓய்வு பெறும் இளையோரைப் பற்றி முன்பு கூறினேன். இன்று, உறங்கச் செல்லும் இளையோரைப் பற்றி பேசுகிறேன். இவர்களது வாழ்வின் முடிவுகளை மற்றவர்கள் கரங்களில் கொடுத்துவிட்டு, இவர்கள் உறங்குகின்றனர். இந்த முடிவுகள் நல்லவை என்று சொல்வதற்கில்லை.

நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் உறங்க விரும்புகிறீர்களா? ('இல்லை' என்று இளையோர் பதில் சொல்கின்றனர்) உங்கள் வாழ்வை மற்றவர்கள் தீர்மானிக்க விட்டு விடப்போகிறீர்களா? (இல்லை). உங்கள் எதிர்காலத்தை நீங்களே கவனமாகத் தீர்மானித்து, அதற்காக அயராமல் உழைக்கப் போகிறீர்களா? (ஆம்)

இவ்வுலகில் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாமல், வாழ்வைக் கடத்துவது, சோஃபாவில் படுத்துறங்கும் வாழ்க்கை. நம்மைச் சுற்றியுள்ள பலர், நாம் சுதந்திரமாக, உறுதியுடன் முடிவெடுப்பதை விரும்புவதில்லை. நம்மைத் தூக்கத்தில் ஆழ்த்துவதில் குறியாய் இருக்கின்றனர்.

மகிழ்வு என்பதை சுகம் என்று தவறாக எண்ணி, நம்முடைய சுகங்களைக் கூட்டிக் கொள்வது, ஒருவகை 'செயலற்ற நிலை'யே! இத்தகைய சுகத்தை, போதைப் பொருள்களில் தேடி, வாழ்வை வீணாக்குவோர் உண்டு. வேறு பலர், சுயநல பாதுகாப்பில் சுகம் காண்பது உண்டு.

இயேசு சவால்களின் ஆண்டவர். 'இன்னும் சிறந்த' என்ற, நிரந்தரமான உணர்வுக்கு, அவர் ஆண்டவர். அவரைத் தொடர்வதற்கு, துணிவு தேவை, சோஃபாவுக்குப் பதிலாக, இரு காலணிகள் தேவை. அவரைத் தொடர்ந்து, 'மதியிழந்த' வண்ணம் புதிய பாதைகளில், செல்லத் துணிவு வேண்டும். பசித்தோர், தாகமாயிருப்போர், ஆடையின்றி இருப்போர், நோயுற்றோர், சிறையில் இருப்போர், நாடுவிட்டு நாடு துரத்தப்படுவோர் இவர்களை இந்தப் பாதையில் சிந்திப்போம்.

இத்தகைய வாழ்வு எல்லாருக்கும் உரிய வாழ்வு அல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கே இது உரியது என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆம், தங்கள் வாழ்வைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு சிலருக்கே இந்த வாழ்வு அமையும்.

இத்தகைய வாழ்வில் பங்கேற்க நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். இறைவன் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறார், உங்கள் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார். நம் வாழ்வில் மூடப்பட்டுள்ள கதவுகளைத் திறக்க அவர் வருகிறார். கனவு காண நம்மைத் தூண்டுகிறார். இவ்வுலகம் மாறும் என்பதைப் பார்ப்பதற்கு நம்மைத் தூண்டுகிறார். நம்முடைய மிகச் சிறந்தவற்றை அவருக்குக் கொடுத்தாலன்றி, இவ்வுலகம் மாறாது. இதுவே நமக்கு முன் உள்ள சவால்.

சோஃபாக்களில் அமர்ந்து  உறங்கும் இளையோர் தேவையில்லை, காலணிகள் அணிந்து புறப்பட தயாராக உள்ள இளையோர் இவ்வுலகிற்குத் தேவை. விளையாட்டில் முன்னணி வீரர்களாக களம் இறங்குவோர் தேவை, விளையாட்டுத் திடலின் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர்கள் தேவையில்லை. உங்கள் கரங்கள், என் கரங்கள் அனைத்தும் ஒப்புரவில் இணைந்து உருவாக்கும் உலகம் நமக்குத் தேவை. இத்தகைய உலகை உருவாக்க தயாரா? (தயார் என்று இளையோர் பதில் சொல்கின்றனர்).

இன்றைய உலகம் நம்மிடமுள்ள பிரிவுகளை, வேறுபாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் முனைப்பாக உள்ளது. வயதில் முதிர்ந்த எங்களுக்கு இளையோராகிய நீங்கள் சொல்லித் தரவேண்டியது, வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழமுடியும் என்ற பாடம். சுவர்களை எழுப்புவதற்குப் பதில், பாலங்களை கட்டுவது எளிது என்பதை, இளையோர் இன்றைய உலகிற்குச் சொல்லித் தரவேண்டும்.

நாம் கட்டவேண்டிய முதல் பாலம் என்னவென்று தெரியுமா? இந்த பாலத்தை இப்போதே, இங்கேயே நம்மால் கட்ட முடியும். அதுதான், நம் அருகில் இருப்பவரை நோக்கி கரங்களை நீட்டி, அவர் கரங்களைப் பற்றுவது. நாம் இந்தப் பாலத்தை இப்போது கட்டுவோம். உங்கள் அருகில் இருப்பவர் கரங்களைப் பற்றுங்கள்.

இவ்வாறு திருத்தந்தை கூறியதும், அச்சத்துக்கத்தில் இருந்த அனைவரும் ஒரு சங்கிலித் தொடர்போல கரங்களைக் கோர்த்து நின்றது மிக அழகாக இருந்தது. திருத்தந்தை தொடர்ந்து பேசினார்.

இப்போது நாம் உருவாக்கியிருக்கும் இந்த மனிதப் பாலம், இன்னும் பல பாலங்களை உருவாக்க ஓர் ஆரம்பமாக அமையட்டும். வழியாக, வாழ்வாக, உண்மையாக விளங்கும் இயேசு, நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். இவ்வுலக வாழ்வில் தனிப்பட்டத் தடங்களைப் பதிக்க நம்மை அழைக்கிறார். பிரிவுகள், வெறுப்பு, வெறுமை என்ற பாதைகளை விட்டு விலகி, உண்மைப் பாதையில் நடக்கச் சொல்லி நம்மை அழைக்கிறார். நம் பதில் என்ன? இவ்விதம் செய்யத் தயாரா?

இவ்வாறு திருத்தந்தை கேட்க, அனைவரும் 'ஆம்' என்று ஒரே குரலில் சொன்னார்கள். இறுதியில், "உங்கள் கனவுகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக!" என்று தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.