2016-07-31 17:01:00

இறுதி திருப்பலியும், மூவேளை செபஉரையும்


ஜூலை,31,2016. ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை காலை, அதாவது, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாள் காலை, கிரக்கோவ் பேராயர் இல்லத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தத்திலுள்ள இரக்கத்தின் வளாகத்திற்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு, காரித்தாஸ் பிறரன்பு அமைப்பால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு இல்லங்களை ஆசீர்வதித்தார். இவ்வில்லங்களில் ஒன்று, முதியோருக்கு உதவி வழங்கவும், மற்றொன்று, வறியோருக்கு உணவு வழங்கவும் கட்டப்பட்டவையாகும்.

போலந்து நாட்டின் பாரம்பரிய உடையணிந்த பெண்கள், தாங்கள் தயாரித்திருந்த ஒரு பெரிய ரொட்டியை திருத்தந்தையின் முன் நீட்ட, அதிலிருந்து ஒரு சிறு துண்டை அவர் சுவைத்தார். இரு காரித்தாஸ் இல்லங்களையும் ஆசீர்வதித்தபின், இரக்கத்தின் வளாகத்தில் இளையோர் நடுவே காரில் வலம் வந்தார். உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு திருப்பலி ஆரம்பமானது.

போலந்து அரசுத் தலைவர், Andrzej Duda, அவரது துணைவியார், Agata Kornhauser Duda, பிரதமர், Beata Szydło, பானமா நாட்டு அரசுத் தலைவர், Juan Carlos Varela Rodriguez என பல முக்கிய பிரமுகர்கள், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் இறுதித் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

திருப்பலி நிகழ்ந்த மேடையருகே, நடமாடும் மருத்துவமனை ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. லெபனான் நாட்டின் புலம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாமில் பயன்படுத்துவதற்கென்று, கிரக்கோவ் காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த மருத்துவமனை, லெபனான் நாட்டிற்கு அனுப்பப்பட உள்ளது.

திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில், 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள், 2019ம் ஆண்டு, பானமா நாட்டில் நடைபெறும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பானமா அரசுத் தலைவரை, போலந்து அரசுத் தலைவர் வாழ்த்தினார். பானமா நாட்டு இளையோர், கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர். உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் அடையாளமாக இருக்கும் சிலுவையை, போலந்து நாட்டு இளையோர், பானமா நாட்டு இளையோர் பிரதிநிதிகள் குழுவிடம் ஒப்படைத்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.