2016-07-31 16:49:00

இறுதி திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


ஜூலை,31,2016. அன்பு இளம் நண்பர்களே, நீங்கள் இயேசுவைச் சந்திக்க கிரக்கோவ் நகருக்கு வந்துள்ளீர்கள். இயேசு சக்கேயுவைச் சந்தித்த நிகழ்வை (லூக்கா 19: 1-10) இன்றைய நற்செய்தியில் கேட்டோம்.

உரோமையர்களுக்காக வரி வசூலித்த சக்கேயு, தன் சொந்த மக்களை வதைத்துவந்தார். இயேசுவுடன் அவர் மேற்கொண்ட சந்திப்பினால், அவர் வாழ்வு அடியோடு மாறியது.

ஆனால், சக்கேயு இயேசுவைச் சந்திக்க பல தடைகள் இருந்தன.  முதல் தடை, அவர் குள்ளமாக இருந்தார். நாம் பலமுறை மிகச் சிறியவர்கள் என்று உணர்வதால், இறைவனைச் சந்திக்க தகுயில்லை என்று கருதுகிறோம். இவ்வாறு கருதுவது, நம் மனநிலையை மட்டுமல்ல, இறை நம்பிக்கையையும் பாதிக்கிறது. இறைவன் நம் ஒவ்வொருவரையும் அவர் சாயலாகப் படைத்து, அவருடன் எப்போதும் மகிழ்ந்திருக்க அழைத்துள்ளார்.

நாம் எந்நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையிலேயே இறைவன் நம்மீது அன்பு கொள்கிறார். நாம் எவ்விதம் உடுத்தியுள்ளோம், நாம் என்ன வைத்திருக்கிறோம் என்பதைவிட, நாம் யார் என்பதே, இறைவனுக்கு முக்கியம். நாம் ஒவ்வொருவரும் அவரது பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்!

சிலவேளைகளில் நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். நமது இலக்குகளைத் தாழ்த்தி விடுகிறோம். நாம் நம்மீது கொள்ளும் அன்பைவிட, இறைவன் நம்மீது கொள்ளும் அன்பு உயர்ந்தது. நாம் இறைவனால் அன்பு கூரப்பட்டவர்கள் என்பதை ஒவ்வொரு நாளின் விடியலிலும் நாம் உணரவேண்டும். "இறைவா, நீர் என்மீது அன்பு கொண்டிருப்பதற்கு நன்றி! இதேபோல், நானும் என் வாழ்வின் மீது அன்புகொள்ள உதவியருளும்!" என்ற செபத்தை ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் சொல்வது, பயனளிக்கும்.

சக்கேயு சந்தித்த இரண்டாவது தடை, வெட்கத்தால் செயலற்றுப்போன நிலை. தன் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர் என்பதை ஏற்கனவே உணர்ந்தவர், சக்கேயு. இப்போது, மரத்தின் மீது ஏறி, மீண்டும் மற்றவரது கேலிக்கு உள்ளாக வேண்டுமா என்ற தயக்கம் அவருக்குள் எழுந்தது. ஆயினும், துணிந்து ஏறினார். காரணம், இயேசுவைக் காணவேண்டும் என்ற ஆவல்.

சிலவேளைகளில், நாம் மிகவும் அன்புகொள்ளும் ஒருவருக்காக எதையும் செய்யத் துணிகிறோமே, அத்தகையத் துணிச்சல் அது. இயேசுவைக் காணவேண்டுமெனில், கரங்களைக் கட்டிக்கொண்டு, அல்லது, ஒரு சில குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இயேசுவைக் காண்பதற்கு துணிகரச் செயல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சக்கேயுவைச் சுற்றியிருந்தோரின் முணுமுணுப்பு, அவர் சந்தித்த மூன்றாவது தடை. பாவியின் இல்லத்தில் இயேசு நுழைந்தார் என்ற முணுமுணுப்பு பலமாக எழுந்தது. கடவுளின் அளவற்ற இரக்கத்தை மறக்கச் செய்வதற்கு பல முணுமுணுப்புக்கள் எழும். அந்த இரக்கத்தில் நம்பிக்கை கொள்ளும் நம்மைப் பார்த்து பலர் ஏளனம் செய்வர். இருந்தாலும், மனம் தளராமல், இந்த உண்மையை நாம் நம்பவேண்டும்.

அன்று, சக்கேயுவைச் சுற்றியிருந்த கூட்டம் அவரைப் பார்த்த பார்வை, கீழ் நோக்கிய வெறுப்புப் பார்வை. ஆனால், இயேசு சக்கேயுவை 'அண்ணாந்து பார்த்தார்' (லூக்கா 19: 5). வெளிப்புறத்தை, மேலோட்டமாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை விடுத்து, உள்ளார்ந்த வகையில் மற்றவர்களைப் பார்க்க இயேசு அழைக்கிறார்.

இறுதியாக, இயேசு கூறும் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். இன்றும் இந்த வார்த்தைகள் நம் ஒவ்வொருவரிடமும் சொல்லப்படுகின்றன. சக்கேயுவே, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்கவேண்டும்" (லூக்கா 19:5)

ஒருவகையில் சொல்லப்போனால், உலக இளையோர் நாள் இன்றுமுதல் ஆரம்பமாகிறது; அது, இனிவரும் நாட்களில், நமது வீடுகளில் தொடரப்போகின்றது. இயேசு இந்த அழகிய நகரிலேயே தங்கப் போவதில்லை; அல்லது, நமது நினைவுகளில் மட்டும் தங்களைப் போவதில்லை. அவர் நம் வீடுகளிலும், தினசரி வாழ்விலும் தங்க விழைகிறார்.

சக்கேயுவை பெயர் சொல்லி அழைத்ததுபோல், நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். 'சக்கேயு' என்ற பெயருக்கு, 'கடவுளின் நினைவு' என்று பொருள். கடவுளின் நினைவுத் திறன், கணணியின் நினைவுத் திறன் போன்றதன்று. தேவைப்பட்டால், பயன்படுத்தி, தேவையில்லையெனில் அழித்துவிடும் நினைவுத் திறன் அல்ல, இது. இது, உயிருள்ள இறைவனின் நித்திய நினைவுத் திறன், வாழும் நினைவுத் திறன்.

இத்தகைய நினைவுத் திறன் கொண்ட இறைவன் நம்மைப் பெயர் சொல்லி அழைத்ததற்காக, அவருக்கு நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மெளனமாக நன்றி கூறுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.