2016-07-30 16:12:00

புனித 2ம் ஜான்பால் திருத்தலம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,30,2016. ஜூலை 30, இச்சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Łagiewniki என்ற இடத்திலுள்ள இறை இரக்கத்தின் திருத்தலத்திற்கு, காலை 8.30 மணிக்குச் சென்றார். இறை இரக்கத்தின் நமதன்னை துறவு சபையின் இல்லத்தில் அமைந்துள்ள கோவிலுக்குள் சென்று, புனித பவுஸ்தீனா கல்லறைக்கு முன் செபித்தார், திருத்தந்தை. அச்சபையைச் சேர்ந்த 200க்கும் அதிகமான அருள் சகோதரிகள் அங்கு கூடியிருந்து, திருத்தந்தையை வரவேற்றனர். பின், அங்கிருந்த விருந்தினர் புத்தகத்தில், 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்ற வார்த்தைகளை, இஸ்பானிய மொழியில் பதிவு செய்தார், திருத்தந்தை. அவ்வில்லத்திலிருந்து, இறை இரக்கத் திருத்தலத்தின் புனிதக் கதவு வழியே நுழைந்து, அக்கோவிலில், ஐந்து இளையோருக்கு ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கினார், திருத்தந்தை. இத்திருத்தலத்தின் மேல் மாடத்தில் நின்று, கூடியிருந்த மக்களுக்கு, இஸ்பானிய மொழியில் வாழ்த்துக்களைக் கூறினார்.

இறைவனின் மிகப்பெரும் கருணையை ஆழமாகச் செவிமடுக்கும்படி, இன்று, இறைவன் விரும்புகிறார். இயேசுவிடமிருந்து விலகிச் செல்லாதீர்கள். நாம் பாவிகளாக இருந்தாலும், இயேசு நம்மைக் கைவிடுவதில்லை. இரக்கத்தின் அன்னையை நோக்கி செபிப்போம்' என்று கூறியத் திருத்தந்தை, அனைவரோடும் இணைந்து, 'அருள் நிறைந்த மரியே' என்ற செபத்தைக் கூறினார்.

அங்கிருந்து, புனித 2ம் ஜான்பால் திருத்தலம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு, அருள் பணியாளர்கள், இருபால் துறவியர், அருள்பணி பயிற்சி பெறுவோர் ஆகியோருக்கு திருப்பலி நிகழ்த்தி, மறையுரையும் வழங்கினார்.

திருப்பலிக்குப் பின்னர், இத்திருத்தலத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள பேராயர் இல்லம் சென்ற திருத்தந்தை, அங்கு 12 இளையோர் பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்தினார். ஐந்து கண்டங்கள் ஒவ்வொன்றின் பிரதிநிதிகளாக ஓர் ஆணும், பெண்ணும் என 10 பேரும், போலந்து நாட்டின் இரு பிரதிநிதிகளும் இணைந்து 12 பேர், திருத்தந்தையோடு உணவருந்த தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.