2016-07-30 11:05:00

திருத்தந்தை - இன்றும் மக்களின் துயரங்கள் தொடர்கின்றன


ஜூலை,30,2016. புதன், வியாழன் ஆகிய இரு நாட்களிலும், கிரக்கோவ் பேராயர் இல்லத்தின் மேல்மாடத்தில் தோன்றி, மக்களைச் சந்தித்து வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி மாலையிலும் திட்டமிட்ட அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்தபின், மேல்மாடத்தில் மக்களைச் சந்திக்க வந்தார். உலகில் மலிந்துவரும் துன்பங்களைக் குறித்துப் பேசினார். கூடியிருந்த மக்களுக்கு போலந்து மொழியில் மாலை வணக்கம் (Dobry wieczór!) என்று வாழ்த்தி, தன் உரையைத் துவக்கினார், திருத்தந்தை.

இன்று துன்பத்தின் நாள். வெள்ளிக்கிழமை, பொதுவாக, இயேசுவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் நாள். உலக இளையோரோடு இணைந்து சிலுவைப் பாதை பக்தி முயற்சியை இப்போதுதான் நிறைவேற்றினோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த துயரம் அல்ல இது, இன்றும் மக்களின் துயரங்கள் தொடர்கின்றன.

இன்று பிற்பகல் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றேன். குழந்தைகள் ஏன் துன்புறவேண்டும்? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. இந்தக் கேள்விக்கு விடைகள் கிடையாது. இது ஒரு மறைப் பொருள்.

இன்று காலை, Auschwitz, Birkenau வதை முகாம்களுக்குச் சென்றேன். எவ்வளவு துயரம்!, எவ்வளவு கொடுமை! இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா?

சித்ரவதைகள், Auschwitz, Birkenau முகாம்களோடு நின்றுவிடவில்லை. இன்றும், கைதிகள் சொல்லமுடியாத சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர். இன்றும் மனிதர்கள் கொடுமையாகக் கொல்லப்படுகின்றனர்.  

இந்தக் கொடுமைகளை இயேசு தன் தோள்களில் சுமக்க வந்தார். நம்மையும் தன்னோடு நடக்கச் சொல்கிறார், செபிக்கச் சொல்கிறார். நோயுற்றோர், பசித்திருப்போர், தனிமையில் இருப்போர், துயருறுவோர், குழந்தைகள் அனைவருக்காகவும் செபிக்கச் சொல்கிறார்.

பல்வேறு நாடுகளில், சிறைகளில் மிருகங்களிலும் கேவலமாக நடத்தப்படும் கைதிகளுக்காக சிறப்பாக செபிக்கிறோம். இவை அனைத்தையும், இயேசு, தன் மீது ஏற்றுக்கொள்கிறார். நமது பாவங்களையும் கூட. நாம் அனைவரும் பாவிகள். ஆயினும், அவர் நம்மீது அன்பு கொள்கிறார்.

செபத்தில் இணைந்துள்ள நாம் அனைவரும், கண்ணீரோடு, நம் தாயைத் தேடி வருகிறோம். அந்தத் தாயிடம், நாம் ஒவ்வொருவரும் நம் தாய் மொழியில் 'அருள் நிறை மரியே' என்ற செபத்தைச் சொல்லி வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.