2016-07-30 11:13:00

கிரக்கோவ் குழந்தைகள் மருத்துவமனையில் திருத்தந்தையின் உரை


ஜூலை,30,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த மருத்துவ மனைக்கு வந்து, குழந்தை நோயாளிகளைச் சந்திப்பது, கிரக்கோவ் நகரில் நான் மேற்கொண்டுள்ள பயணத்தின் ஒரு முக்கியப் பகுதி. இந்த மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் அருகிலும் சென்று, அவர்களை அணைத்து, அவர்கள் சொல்வதற்கு செவிமடுத்து, அவர்களுக்காகச் செபிக்க விழைகிறேன்.

நாம் நற்செய்தியில் சந்திக்கும் இயேசு, நோயுற்றவர்களைத் தேடிச் சென்றபோது, நோயுற்ற குழந்தை மீது அன்னை காட்டும் பரிவைப் போல, பரிவுகொண்டார்.

கிறிஸ்தவர்களாகிய நாம், இயேசுவைப் போல், நோயுற்றவருக்கு அருகில் சென்று அரவணைத்து, செபிப்பது எவ்வளவு சிறந்தது! ஆனால், நம் சமுதாயம், ஏற்றுக்கொள்ளும் சமுதாயமாக மாறாமல், தூக்கியெறியும் சமுதாயமாக மாறியுள்ளது. இவ்வாறு தூக்கியெறியப் படுபவர்களில், நோயுற்றோரும், வலுவற்றோரும் அதிகம்.

இந்தக் கலாச்சாரத்திற்கு ஒரு மாற்றாக, மிகவும் வலுவற்றோரையும், நோயுற்றோரையும் இந்த மருத்துவமனை வரவேற்று, அரவணைப்பது, எவ்வளவு அழகாக உள்ளது! மனிதராக, கிறிஸ்தவராக இருப்பதற்கு இம்மருத்துவமனை ஓர் எடுத்துக்காட்டு.

இத்தகைய அன்பும், அரவணைப்பும் பல இடங்களில் பரவவேண்டும் என்பதை இவ்விடத்திலிருந்து கூற விழைகிறேன். 'நோயுற்றோரைக் காணச் செல்லுதல்' என்று, நற்செய்தியில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை, தங்கள் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக்கியுள்ள அனைவரையும் நான் மனதார வாழ்த்துகிறேன். மருத்துவர்கள், உதவியாளர்கள், நலப்பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மருத்துவ மனைகளில் பணியாற்றும் அருள் பணியாளர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இறைவன் உங்கள் பணியை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக! இந்த மருத்துவமனை வழியாகவும், உலகிலுள்ள அனைத்து மருத்துவமனைகள் வழியாகவும் பணியாற்றும் அனைவருக்கும் இறைவன் தேவையான சக்தியை அருள்வாராக!

இந்த சந்திப்பிற்கு நன்றி! உங்கள் அனைவரையும் என் உள்ளத்திலும், செபத்திலும் ஏந்திச் செல்கிறேன். எனக்காக செபிக்க மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.