2016-07-30 15:53:00

கிரக்கோவ் குழந்தைகள் மருத்துவமனையில் திருத்தந்தை


ஜூலை,30,2016. வெள்ளிக்கிழக்கை என்றாலே இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்போடு தொடர்புடைய நாள். இந்த நாள் காலையில், Auschwitz மற்றும் Birkenau வதைமுகாம்களுக்குச் சென்று செபித்ததோடு, வதைமுகாமுடன் தொடர்புடைய பலரையும் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அமைதியிலும், செபத்திலும் வெள்ளி காலைப் பொழுதைச் செலவழித்தத் திருத்தந்தை, மாலை, உள்ளூர் நேரம் 4.30 மணிக்கு, பேராயர் இல்லத்திலிருந்து 9 கி.மீ. தூரத்திலிருந்த Prokocim பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றார்.

'துன்பம்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட வெள்ளிக்கிழமை நிகழ்வுகளில் இரண்டாவதாக இடம்பெற்ற இந்நிகழ்வில், நோயுற்ற குழந்தைகளின் பிரதிநிதிகளாக, 24 குழந்தைகள் சக்கர நாற்காலிகளில் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்களின் தலையைத் தொட்டும், கன்னங்களை வருடியும், அரவணைத்தும் திருத்தந்தை அவர்களோடு தன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவரை வரவேற்க அங்கு வந்திருந்த போலந்து பிரதமர், Beata Maria Szydło அவர்கள், வரவேற்புரை வழங்கினார்.

தான் செல்லுமிடங்கள் அனைத்திலும், விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்ற உயர்ந்த புண்ணியங்களை திருத்தந்தை எடுத்துச்  செல்வதற்காக நன்றி தெரிவித்த பிரதமர் Szydło அவர்கள், இதே மூன்று புண்ணியங்களுடன் இந்த மருத்துவமனை 24 மணிநேரமும் செயலாற்றுகிறது என்று கூறினார். இந்த வரவேற்புரையைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை வழங்கினார்.

இச்சந்திப்பின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகள் மீது காட்டிய பரிவைக் கண்ட பல பத்திரிகையாளர்கள், புனிதத் திருத்தந்தை, 23ம் ஜான் அவர்கள் குழந்தைகள் மீது காட்டிய அன்புடன் இதனை ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். நோயுற்ற குழந்தைகளில் ஒருவர், மஞ்சள் வண்ணப் பின்னணியில் சிவப்பு வண்ண இதயத்தை வடித்திருந்த ஓர் ஓவியத்தைத் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.

மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாகச் சந்தித்தத் திருத்தந்தை, அந்த மருத்துவ மனைக்கு ஓர் ஓவியத்தைப் பரிசளித்தார். நோயுற்றோர் பலர், இயேசுவைத் தேடி வருவதுபோல் இந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது.

ஏறத்தாழ 1 மணி நேரம் நீடித்த இச்சந்திப்பிற்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் நடத்தும் சிலுவைப் பாதை நிகழ்வில் பங்கேற்க, போனியே (Błonia) பூங்கா நோக்கிச் சென்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.