2016-07-30 16:17:00

ஒருவழிப் பயணத்தை மேற்கொள்ளுங்கள் - திருத்தந்தையின் அழைப்பு


ஜூலை,30,2016. புனித 2ம் ஜான்பால் திருத்தலத்தில், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர், அருள்பணி பயிற்சி பெறுவோர் ஆகியோருக்கு, திருத்தந்தை வழங்கிய மறையுரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, இப்போது நாம் கேட்ட நற்செய்தி, (யோவான் 20:19-31) ஓர் இடம், ஒரு சீடர், மற்றும் ஒரு நூலைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த இடம், உயிர்ப்பு நாளன்று மாலையில், சீடர்கள் கதவுகளை மூடிக்கொண்டு தங்கியிருந்த இடம். எட்டு நாட்கள் சென்றபின், மீண்டும் அதே இடத்தில், சீடர்கள், மூடிய கதவுகளுக்குப் பின் கூடியிருந்தனர்.

அவ்விடத்தில் இயேசு நுழைந்து, அவர்களுக்கு அமைதியையும், தூய ஆவியாரையும் வழங்குகிறார்; அவர்களுக்கு பாவ மன்னிப்பும் தருகிறார். ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமெனில், இறைவனின் இரக்கத்தை வழங்குகிறார். மூடிய கதவுகளுக்குப் பின் இருந்து, இயேசுவின் கட்டளை ஒலிக்கிறது, "தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்" (யோவான் 20:21).

இயேசு அனுப்புகிறார். துவக்கத்திலிருந்தே தன் திருஅவை இவ்வுலகிற்குள் செல்லவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அவர் இவ்வுலகிற்கு தன் தந்தையால் அனுப்பப்பட்டது, இவ்வுலகை அதிகாரம் செய்வதற்கு அல்ல. மாறாக, ஓர் அடிமையின் உருவம் தாங்கி, (பிலிப். 2:7) 'பணிவிடை பெறுவதற்கு அன்று, பணிவிடை புரியவும் (மாற்கு 10:45), நற்செய்தியை அறிவிக்கவும் (லூக்கா 4:18) இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.

தன் சீடர்களும், மூடிய கதவுகளைத் திறந்து, இவ்வுலகிற்குச் செல்லவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். "கதவைத் திறந்துவிடுங்கள்" என்று புனித 2ம் ஜான்பாலும் நம்மிடம் விண்ணப்பித்துள்ளார்.

எனினும், அருள் பணியாளராக, துறவியராக, நாம், மூடிய கதவுகளுக்குப் பின், நம்மை நாமே காத்துக்கொள்ள முயல்கிறோம். இயேசு நம்மை அழைப்பது, ஓர் ஒருவழிப் பயணத்தை மேற்கொள்வதற்கு. இப்பயணத்தில், திரும்பிவரும் பயணச்சீட்டு கிடையாது. இப்பயணத்தில் மூடியக் கதவுகள், பாதி வழியில் திரும்புதல் போன்றவை கிடையாது. இப்பயணத்திற்கு நாம் அதிகம் எடுத்துச் செல்லவேண்டாம் என்றும் இயேசு கூறியுள்ளார். நம் பாதுகாப்பைத் துறந்து, அவரை நம்பி இந்தப் பயணத்தை மேற்கொள்ள அழைக்கிறார்.

இயேசுவைப் போல வாழ விரும்புவோர், அவர்களுக்கு விருப்பமான இடத்தையோ, வாழ்வையோ தேர்ந்துகொள்ள மாட்டார்கள். ஆண்டவரை தங்கள் வாழ்வின் மையத்திற்குக் கொணர்வதைத் தவிர, வேறு எந்தச் செல்வத்தையும் இவர்கள் தேடுவதில்லை. உலக அதிகாரங்களை அடித்தளமாகக் கொண்டு இவர்கள் தங்கள் இல்லங்களை அமைப்பதில்லை. பாதுகாப்பான ஓர் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு தங்கள் நேரத்தை இவர்கள் வீணாக்குவது இல்லை. இவர்களது வாழ்வு ஆண்டவரில் அகமகிழ்வது ஒன்றே. துணிவுடன் சவால்களை எதிர்கொண்டு, இதுவரை யாரும் செல்லாத வழிகளில், செல்லாத இடங்களுக்கு செல்லத் துணிபவர்கள்.

இரண்டாவது, இன்றைய நற்செய்தி, ஒரு சீடரை நம்முன் கொணர்கிறது. அந்தச் சீடரின் பெயர், தோமா. தன்னுடைய தயக்கத்தாலும், புரிந்துகொள்ள வேண்டுமென்ற வேட்கையாலும் சிறிது பிடிவாதமாகச் செயல்பட்ட தோமா, நம்மைப் போல உள்ளார். தன்னையும் அறியாமல், இவர் ஓர் அற்புதக் கொடையை நமக்கு வழங்கியுள்ளார். இவர்தான் இறைவனை மனிதருக்கு மிக அருகில் கொணர்ந்துள்ளார். தன்னை நாடும் எவருக்கும் இறைவன் தன்னை மறைத்துக்கொள்வது கிடையாது என்பதை, இச்சீடர் நமக்குச் சொல்லித் தருகிறார். மனிதருக்காக தான் எவ்வளவு தூரம் காயப்பட்டிருக்கிறார் என்பதைத் தொட்டு உணர, தோமாவுக்கு இயேசு அனுமதி வழங்குகிறார். இயேசுவின் சீடர்களாகிய நாம், ஆண்டவரின் காயப்பட்ட உடலை, முழு நம்பிக்கையோடு தொடவேண்டும். நம்பிக்கையோடு நம் வாழ்வை அவர் முன் கொணர்வதை அவர் விரும்புகிறார் என்பதை, புனித பவுஸ்தீனா வழியே இயேசு கூறியுள்ளார்.

அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள நம்மிடம் இயேசு  என்ன கேட்கிறார்? அவரது இரக்கம், மன்னிப்பு இவற்றிலிருந்து வாழ்வு பெற்று, அதனை, கனிவோடு நம் சகோதர, சகோதரிகளுக்கு அளிப்பதையே இயேசு விரும்புகிறார். உண்மையான சீடர்கள், கேள்விகள் கேட்கத் தயங்குவதில்லை. தங்கள் கேள்விகளை, சந்தேகங்களை, ஆண்டவரிடமும், தங்களை வழிநடத்துவோரிடமும் தயங்காது கொணர்ந்து, உண்மையான பதில்களைத் தேடுவதையே இயேசு விரும்புகிறார்.

தன் தேடலின் இறுதியில், சீடர் தோமா, இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டார். "என் ஆண்டவரே, என் கடவுளே" (யோவான் 20:28) என்ற அற்புத செபத்தை அறிக்கையிட்டார். இந்த செபத்தை நாம் ஒவ்வொரு நாளும் சொல்லி, இறைவனே நமது அழியாத கருவூலம் என்று அறிக்கையிடுவது பயனுள்ள ஒரு முயற்சி.

இன்றைய நற்செய்தியின் இறுதி வரிகள், ஒரு நூலைப் பற்றி கூறுகின்றன. அதுதான் நற்செய்தி. இயேசு ஆற்றிய அனைத்து அடையாளங்களும் இந்நூலில் எழுதப்படவில்லை (20:30) என்று கூறப்பட்டுள்ளது.

இயேசுவின் அடையாளங்கள், இன்று, வாழும் நற்செய்தியான நம் வழியே தொடர்கின்றன. வாழும் நற்செய்தியில் இன்னும் பல பக்கங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. அவை, நமது இரக்கச் செயல்களால், அன்பால் நிரப்பப்படவேண்டும். நமது வாழ்வு நூலின் பக்கங்கள் எவ்விதம் தோன்றுகின்றன? அவை வேற்றுப் பக்கங்களாக உள்ளனவா?

இறைவனின் அன்னை நமக்கு உதவட்டும். அவரே, இறை வார்த்தையை முதன் முதலில் தன் வாழ்வில் ஏற்றவர். இரக்கத்தின் அன்னையாகிய அவர், இயேசுவின் காயங்களைப் பராமரிக்கும் பக்குவத்தை நமக்குச் சொல்லித் தரட்டும். காயப்பட்டிருக்கும் மனித சமுதாயத்தை குணப்படுத்தும் பணியை செய்யும்போது, இயேசுவின் காயத்தை குணமாக்குகிறோம்.

அன்பு சகோதர, சகோதரிகளே, நம் ஒவ்வொரு வாழ்வு நூலிலும், இறைவனின் இரக்கத்தை உணர்ந்த வரலாறு எழுதப்பட்டிருக்கும். இன்று, அந்த வரலாற்றை நன்றியோடு புரட்டிப் பார்ப்போம்.

நாம் மூடிய கதவுகளுக்குப் பின் இருந்தபோதும், இறைவன் நம்மைத் தேடிவந்து, நம் வாழ்வின் நடுவில் நின்றதற்கு நன்றி சொல்வோம். தோமாவை பேர் சொல்லி அழைத்து, தன் இரக்கத்தில் பங்களித்தது போல், நம்மையும் பேர் சொல்லி அழைத்து, அவர் அன்பின் நற்செய்தியை நாம் தொடர்ந்து எழுத வரம் தருவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.