2016-07-29 16:14:00

திருமண வாழ்வைப் பற்றி திருத்தந்தையின் அறிவுரைகள்


ஜூலை,29,2016. ஜூலை 28, இவ்வியாழன் மாலையில் அனைத்து நிகழ்வுகளையும் முடித்தபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரக்கோவ் பேராயர் இல்லத்திற்குத் திரும்பிய வேளையில், அவ்வில்லத்திற்கு முன் மக்கள் கூடியிருந்து, பாடல்கள் பாடிக் கொண்டிருந்தனர். புதன்கிழமை இரவு உறங்கச் செல்வதற்குமுன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வில்லத்தின் மேல்மாடத்தில் தோன்றி மக்களை வாழ்த்தியதால், இன்றும் திருத்தந்தை தங்களைக் காண வருவார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் கூடியிருந்தனர். கூடியிருந்த மக்களைக் காண மேல்மாடத்தில் தோன்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமண வாழ்வைப் பற்றி ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் வழங்கிய உரை இதோ:

இங்கு கூடியிருப்போரில் பலர் இளம் தம்பதியர் என்பதை உணர்கிறேன். இன்றைய உலகில் திருமணம், மற்றும் குடும்ப வாழ்வை மேற்கொள்வதற்கு மிகுந்த மன உறுதி தேவை. இந்தத் துணிவும், உறுதியும் கொண்ட உங்களை வாழ்த்துகிறேன்.

குடும்ப வாழ்வை சரிவர நடத்திச் செல்வதற்கு, மூன்று வார்த்தைகள் உதவி செய்யும். அவை - அனுமதி, நன்றி, மன்னிப்பு.

கணவனும், மனைவியும் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளும்போது, ஒருவர் ஒருவரைக் கலந்தாலோசித்து, அனுமதி பெறுவது நல்லது.

ஒருவர் ஒருவருக்கு நன்றி சொல்வதும் அழகான பழக்கம். உங்களை திருமண உறவில் இணைத்த இறைவனுக்கு நன்றி சொல்வதுபோல், ஒருவர் ஒருவருக்கும் நன்றி சொல்வது அழகு.

மன்னிப்பு கேட்பது, மிகக் கடினமான ஒரு செயல். மனித வாழ்வில், குறிப்பாக, திருமண வாழ்வில் தவறுகள் நிகழும். மன்னிப்பை கேட்பதும், தருவதும் இத்தவறுகளைச் சீர் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

சிலவேளைகளில், கருத்து வேறுபாடுகள் உருவாகும்போது காரசாரமான விவாதங்கள் தோன்றும்; கோபமான வார்த்தைகளும், சில வேளைகளில் தட்டுகள், பாத்திரங்களும் பறக்கும். கவலைப்படாதீர்கள்! இவை இயல்பாக நடப்பவையே! ஆனால், ஒன்றை மட்டும் நான் வலியுறுத்திக் கூற விழைகிறேன். இரவு, சமாதானம் செய்யாமல் உறங்கச் செல்லாதீர்கள். இல்லையென்றால், அடுத்தநாள் தொடரும் பனிப்போர், ஆபத்தாக இருக்கும். சமாதானம் செய்வதற்கு, பெரிய சொற்பொழிவுகள் தேவையில்லை. ஒரு வார்த்தை, ஓர் அடையாளச் செயல் போதும்.

இங்கு கூடியுள்ள அனைத்து குடும்பங்களுக்காகவும், குறிப்பாக, புதிதாக திருமண வாழ்வைத் துவக்கியுள்ளவர்களுக்காகவும் செபிப்போம். அனைவரும் இணைந்து அன்னை மரியாவின் வழியே செபிப்போம்.

என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் ஆசீரை வழங்கியபின், அவர்களிடம், எனக்காக செபிக்க மறவாதீர்கள். உங்கள் அனைவருக்கும் இரவு வணக்கம், நன்கு உறங்குங்கள் என்று கூறி முடித்தார். இதுவே திருத்தந்தையின் வியாழன் தின கடைசி நிகழ்வாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.