2016-07-28 15:55:00

வியாழன் காலை திருத்தந்தையின் நிகழ்வுகள்


ஜூலை,28,2016 ஜூலை 28, வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயண நிகழ்வுகள், கிரக்கோவ் பேராலயத்திற்கு அருகிலுள்ள காணிக்கை அன்னை துறவியர் சபை இல்லத்தைச் சந்திப்பதுடன் துவங்கியது. 18ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இத்துறவு இல்லத்தில் வாழ்ந்துவரும் துறவியர், அருகே இரு பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர். இங்குள்ள அருள் சகோதரிகளுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர், Czestochowa நகரை நோக்கி, தன் பயணத்தை மேற்கொண்டார், திருத்தந்தை.

ஏறத்தாழ 100 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்நகருக்கு ஹெலிகாப்டரில் செல்வதாக திருத்தந்தையின் பயணத் திட்டத்தில் குறிக்கப்பட்டிருந்தது. எனினும், காலநிலை மோசமாக இருந்ததால், இப்பயணத்தை திருத்தந்தை காரிலேயே மேற்கொண்டார். அவ்வாறு செல்லும் வழியில், யாரும் எதிர்பாராத வகையில், வழியிலிருந்த ஒரு மருத்துவ மனைக்கருகே காரை நிறுத்தச் சொன்னார், திருத்தந்தை.

கிரக்கோவின் முன்னாள் பேராயர், 89 வயது நிறைந்த கர்தினால் Franciszek Macharski அவர்கள், சுயநினைவற்ற நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவருவதை அறிந்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவமனைக்குள் சென்று, கர்தினாலின் படுக்கை அருகே சில மணித்துளிகள் அமைதியாக செபித்தார். பின்னர், தன் பயணத்தைக் தொடர்ந்தார்.

Czestochowaவின் யஸ்ன கோராவில் அமைந்துள்ள புனித பவுல் துறவு இல்லத்திற்குச் சென்ற திருத்தந்தை, அங்கிருந்து, மரியன்னை திருத்தலம் சென்று, கறுப்பு அன்னை திரு உருவத்திற்கு முன் செபித்தார். பின்னர் அத்திருத்தலத்திற்கருகே திருப்பலிக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வளாகம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை. பல்லாயிரக் கணக்கில் கூடியிருந்த இளையோர் மற்றும் போலந்து மக்கள் நடுவே, போலந்து நாடு திருமுழுக்கு பெற்றதன் 1050ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஒன்றை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.