2016-07-28 09:31:00

போலந்து விமானப் பயணத்தில் திருத்தந்தை வழங்கிய கருத்துக்கள்


ஜூலை,28,2016. ஜூலை 27, இப்புதன் பிற்பகல் 2 மணிக்கு உரோம் நகர் விமான நிலையத்திலிருந்து போலந்து நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானப் பயணத்தில், தன்னுடன் பயணித்த ஊடகவியலாளர்களுடன் ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

பிரான்ஸ் நாட்டின் Rouen நகர் ஆலயத்தில், அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள் கொல்லப்பட்டது உட்பட, தற்போது உலகின் பல நாடுகளில் நிகழும் வன்முறைகளை, ஒரு போருக்கு ஒப்புமைப்படுத்திப் பேசினார், திருத்தந்தை.

நாம் தற்போது சந்தித்துவருவது, மத அடிப்படையில் உருவாகும் போர் என்று சொல்லப்பட்டாலும், இது உண்மையிலேயே அதிகாரப் பேராசையினால் மேற்கொள்ளப்படும் போர் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

பணம், இயற்கை வளங்கள், மக்களை அடக்கியாளும் அதிகார ஆசை என்ற காரணங்களே போர்களாக உருவாகின்றன. எல்லா மதங்களும் அமைதியை விரும்புகின்றன; ஆனால், அதிகார ஆசை கொண்ட மனிதர்களோ போரை விரும்புகின்றனர் என்று திருத்தந்தை விளக்கினார்.

பிரான்ஸ் நாட்டில், திருப்பலியில், அமைதிக்காக செபித்துக் கொண்டிருந்த வேளையில், அருள் பணியாளர் கொல்லப்பட்டிருப்பது, தற்போது நிலவும் அதிகாரப் போரின் ஒரு வெளிப்பாடு என்று திருத்தந்தை கூறினார்.

தான் பங்கேற்கச் செல்லும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் குறித்துப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு நினைவுறுத்துவது இளையோரே என்பதையும், போலந்து நாட்டில் நாம் சந்திக்கப் போகும் இளையோர், நமக்கு நம்பிக்கை தரும் விடயங்களைச் சொல்லப் போகின்றனர் என்பதையும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் நாட்டில் கத்தோலிக்க அருள் பணியாளர் கொல்லப்பட்டிருப்பதையொட்டி, பிரான்ஸ் அரசுத் தலைவர், தன்னை, தொலைபேசி.யில் அழைத்து, ஒரு சகோதரனைப் போல தன்னுடன் பேசினார் என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, அவரைப் போல இன்னும் பலர் தன்னை அழைத்து அனுதாபங்களைத் தெரிவித்ததற்காக அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.