2016-07-28 11:44:00

போலந்து அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


ஜூலை,28,2016 அரசுத் தலைவரே, அரசு அதிகாரிகளே, அயல்நாட்டுத் தூதர்களே,

மத்தியக் கிழக்கு ஐரோப்பாவிற்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இப்பயணத்தை, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் பிறந்து வளர்ந்த போலந்து நாட்டில் மேற்கொள்வது எனக்கு மிக மகிழ்வாக இருக்கிறது. உலக இளையோர் நாள் என்ற எண்ணத்தை விதைத்து வளர்த்த அப்புனிதர் வாழ்ந்த பூமி இது. ஐரோப்பிய கலாச்சாரத்தின் ஆணிவேராக விளங்குவது, கிறிஸ்தவ மறை என்பதை புனித ஜான் பால் நமக்கு அடிக்கடி கூறிவந்துள்ளார்.

போலந்து மக்களின் தனித்துவம், அவர்களிடம் விளங்கும் நினைவுத் திறன். வரலாறு குறித்து திருத்தந்தை ஜான்பால் அவர்கள் கொண்டிருந்த நினைவுத் திறன், என்னை வியக்க வைத்துள்ளது. ஒரு நாட்டின் மக்கள் தங்கள் வேர்களை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும்போது, அம்மக்களிடம் வீண் பெருமை நிலவாது. உங்கள் பாரம்பரியம் குறித்து தெளிவான சிந்தனைகளைக் கொண்டுள்ள நீங்கள், அண்மையில், போலந்து நாடு கிறிஸ்தவ மறையைத் தழுவி, திருமுழுக்கு பெற்றதன் 1050ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடினீர்கள். இந்நாட்டு மக்களை ஒருங்கிணைக்க அத்தருணம் சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்தது.

தன்னடையாளம், பிறரது அடையாளம் ஆகியவற்றைப் புரிந்து, மதிக்கும்போது, பிற நாடுகளுடன் கூட்டுறவு உருவாகும். தனிப்பட்ட வாழ்விலும், சமுதாய அளவிலும் நாம் கொண்டிருக்கும் நினைவுகள், நல்லதாகவும், தீயதாகவும் அமைகின்றன. நல்ல நினைவுகள் என்ன என்பதை, நற்செய்தியில், மரியாளின் புகழ் பாடலில் நாம் காண்கிறோம். இறைவன் செய்த நன்மைகளை, மரியா, தன் புகழ் பாடலில் நினைவுகூருகிறார். தீய நினைவுகள், நமக்கு ஏற்பட்ட குறைகளின் மீது அதிக கவனம் செலுத்துகிறது.

உங்கள் நாட்டின் அண்மைய வரலாற்றைக் காணும்போது, நீங்கள் நல்லவற்றை அதிகம் நினைவுகூர்ந்து வருவதைக் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, போலந்து, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் வழங்கிய மன்னிப்பின் 50ம் ஆண்டை, போலந்து நாட்டு ஆயர்களும், ஜெர்மன் நாட்டு ஆயர்களும், கொண்டாடியதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். திருஅவையில் துவங்கிய இந்த மன்னிப்பு அலை, சமுதாய, அரசியல் தளங்களிலும் பரவும் என்பது உறுதி. போலந்து கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து வழங்கிய ஓர் அறிக்கையை இப்போது எண்ணி, நன்றி செலுத்துகிறோம்.

இந்நாட்டின் பழையக் காயங்களை மறந்து, நல்ல நினைவுகளில் இந்த நாடு முன்னோக்கிச் சென்றது, பாபிலோன் அடிமைத் தனத்திலிருந்து திரும்பி வந்த இஸ்ரயேல் மக்கள் கூறிய வார்த்தைகளை நினைவுக்கு கொணர்கிறது. சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது” (திருப்பாடல் 126: 1-2). இவ்விதம் முன்னோக்கிச் செல்வதற்கு, உண்மை, மற்றும் நன்னெறி மீது உறுதியான உள்ளம் கொண்டிருக்கவேண்டும். மனித வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் உண்மையும், நன்னெறியும் தேவை. குறிப்பாக, நமது பொருளாதாரம், சுற்றுச் சூழல் மீது அக்கறை, குடிபெயர்ந்தோர் பிரச்சனை குறித்த நிலைப்பாடு ஆகிய தளங்களில் மனிதர்களை மதித்து, உறவுகளை வளர்க்கும் மனநிலை அவசியம்.

குடிபெயர்ந்தோர் பிரச்சனையில், நம்மிடம் உள்ள அச்சங்களை நீக்கி,  அதிகமான கனிவும், ஞானமும் கொண்டிருக்க அழைக்கப்பட்டுள்ளோம். போலந்து நாட்டுக்குத் திரும்பி வர விழைவோரை வரவேற்கும் அவசியம் உள்ளது. போர், பட்டினி, மதநம்பிக்கையைப் பின்பற்றத் தடை ஆகிய கொடுமைகளிலிருந்து தப்பித்து வரும் மக்களை வரவேற்க போலந்து நாடு தயாராக இருக்கவேண்டும்.

1000 ஆண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள போலந்து நாடு, தன் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கவும், தற்போதைய பிரச்சனைகளை சந்திக்கவும் வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். இளையோர், பிரச்சனைகளில் மட்டும் மூழ்கிவிடாமல், எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வழிவகுக்க வேண்டும்.

சமுதாயத்தின் அடித்தளமான குடும்பத்தைக் காத்து வளர்க்கும் சமுதாயக் கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கருவிலிருந்து, கல்லறை வரை, உயிர்கள் மீது மதிப்பு கொள்ளும் பக்குவம் இந்நாட்டில் வளரவேண்டும். உயிர்களை வரவேற்பதும், காத்து வளர்ப்பதும் அரசு, திருஅவை மற்றும் சமுதாயம் என்ற அனைத்து நிலைகளிலும் உள்ளோரின் கடமை. எந்த ஒரு குழந்தையும், பாரம் என்று கருதப்படாமல், கடவுளின் கொடை என்று வரவேற்கப்படவேண்டும்.

போலந்து நாடு, தன் நீண்ட வரலாற்றில் திருஅவையின் ஆதரவை இதுவரை பெற்றுவந்ததைப் போல், இனியும் தொடர்ந்து பெறும் என்று உறுதி அளிக்கிறேன்.

Czestochowaவின் அன்னை மரியா, போலந்து நாட்டை ஆசீர்வதித்து, காப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.