2016-07-28 15:27:00

கிரக்கோவ் விமான நிலையத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு


ஜூலை,28,2016. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், கத்தோலிக்க மறை முக்கிய இடத்தை வகிக்கும் போலந்து நாட்டில், ஜூலை 27, இப்புதனன்று மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கினார். 25 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வுலகில் கத்தோலிக்கத் திருஅவையை வழிநடத்திச் சென்ற புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் பிறந்த நாடு என்பது மட்டுமல்ல, இறை இரக்கத்தின் பக்தியை உலகெங்கும் விதைத்த புனித மரிய ஃபவுஸ்தீனா கோவால்ஸ்கா (Maria Faustina Kowalska)வையும் திருஅவைக்கு வழங்கிய நாடு, போலந்து.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்குச் சென்றுள்ளார். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, உலக இளையோர் நாள் கொண்டாட்டம் என்ற சிறப்புக்களுடன், மற்றுமொரு முக்கிய நாளையும் போலந்து நாடு கொண்டாடுகிறது. ஆம், அந்நாடு கிறிஸ்தவ மறையைத் தழுவி, திருமுழுக்கு பெற்றதன் 1050ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி வருகிறது.

இத்தகைய முக்கிய நிகழ்வுகளை முன்னிறுத்தி, அந்நாட்டை நோக்கி, புதன் கிழமை உரோம் நேரம், பிற்பகல் 2 மணிக்கு தன் பயணத்தைக் துவக்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 2 மணி நேர விமானப் பயணத்தில், அவருடன் பயணம் செய்த ஊடகத் துறையினருடன் சிறிது நேரம் உரையாடினார்.

உரோம் நகருக்கும், கிரக்கோவ் நகருக்கும் இடைப்பட்ட 1100 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் கடந்து, மாலை 4 மணிக்கு, அதாவது இந்திய நேரம், மாலை 7.30 மணிக்கு, கிரக்கோவ் நகரின், திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் விமான நிலையத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்றடைந்தார். அவரை வரவேற்க போலந்து அரசுத்தலைவர், Andrzej Duda, அவரது துணைவியார், Agata Kornhauser Duda, பிரதமர், Beata Szydło, ஏனைய அரசு அதிகாரிகள், திருஅவைத் தலைவர்கள் ஆகியோரும், பெரும் எண்ணிக்கையில் இளையோரும், போலந்து மக்களும் கூடியிருந்தனர். திருத்தந்தை விமானத்திலிருந்து இறங்கியதும், மக்கள் கூட்டம், உரத்தக் குரலில் பாடி, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

அரசுத் தலைவர், திருத்தந்தையை கைகுலுக்கி வரவேற்றபின், பிரதமர் Szydło அவர்கள், முன்வந்து, முழந்தாளிட்டு திருத்தந்தையின் மோதிரத்தை முத்தி செய்தார். பிரதமர் Szydło அவர்களின் தலைமையில் இயங்கும் அரசு, கத்தோலிக்கத் திருஅவையுடன் தன் நெருக்கத்தை எப்போதும் வெளிப்படுத்தி வருகிறது என்பது, குறிப்பிடத்தக்கது.

விமான நிலைய வரவேற்பு நிகழ்வில், வத்திக்கான், மற்றும், போலந்து நாட்டு பண்கள் இசைக்கப்பட்டன. வெள்ளையும், மஞ்சளும் கொண்ட வத்திக்கான் நாட்டுக் கொடியையும், வெள்ளையும் சிகப்பும் கொண்ட போலந்து நாட்டுக் கொடியையும் அசைத்தபடி, மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அவர்களை நோக்கி மகிழ்வுடன் கையசைத்து, காரில் ஏறி, Wavel மாளிகை நோக்கிப் பயணமானார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.