2016-07-27 15:07:00

திருத்தந்தையுடன் தொலைபேசியில் பேசிய பிரான்ஸ் அரசுத் தலைவர்


ஜூலை,27,2016. ஓர் அருள் பணியாளர் தாக்கப்படும்போது, பிரான்ஸ் நாடு முழுவதும் காயப்படுகிறது என்று, பிரான்ஸ் நாட்டின் அரசுத் தலைவர், Francois Hollande அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தொலைபேசியில் பேசியபோது கூறினார்.

பிரான்ஸ் நாட்டின் Rouen நகரில், 84 வயது நிறைந்த அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள் கொல்லப்பட்டதையடுத்து, பிரான்ஸ் அரசுத் தலைவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்செவ்வாய் மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இருவரால் நடைபெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து, அனைத்து ஆலயங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று, பிரான்ஸ் அரசுத் தலைவர் Hollande அவர்கள், திருத்தந்தையிடம் உறுதி வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக, Rouen பேராயர் Dominique Lebrun அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த செய்தியில், இறைவனின் அமைதி இவ்வுலகில் நிலவ வேண்டும் என்ற மன்றாட்டு எழுப்பப்படும் திருப்பலி நேரத்தில், அருள்பணி Hamel அவர்கள் கொல்லப்பட்டிருப்பது, தன்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.

கிரக்கோவ் நகரில் துவங்கியுள்ள உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் சென்றுள்ள, Rouen பேராயர் Lebrun அவர்கள், வன்முறைக்கு எதிராக, கிறிஸ்தவர்கள் வைத்திருக்கும் ஒரே ஆயுதம், செபம் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.