2016-07-27 14:56:00

திருத்தந்தை: சுவரை அல்ல, தொடுவானத்தை இளையோர் பார்க்கட்டும்


ஜூலை,27,2016. ஒரு சுவற்றுக்கு முன் நிற்பதைப் போல் அல்லாமல், பரந்து விரிந்த ஒரு தொடுவானத்தை நோக்கி நிற்பதுபோல் உங்கள் வாழ்வின் கண்ணோட்டம் அமையவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு இளையோருக்கு அனுப்பியுள்ள ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தின் பிரவுன்ஸ்வீல் (Brownsville) மறைமாவட்ட இளையோர், ஜூலை 26, இச்செவ்வாயன்று, புனித அன்னா திருநாளை, இணைந்து கொண்டாடிய வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்விளையோருக்கு ஸ்பானிய மொழியில் காணொளிச் செய்தியொன்றை அனுப்பினார்.

கிரக்கோவ் நகரில் உலக இளையோர் நாள் துவங்கும் அதே நாளில், பிரவுன்ஸ்வீல் மறைமாவட்ட இளையோரும் இணைந்து வந்திருப்பது குறித்து, திருத்தந்தை, தன் மகிழ்வையும், அருகாமையையும் இச்செய்தியில் வெளியிட்டார்.

இளையோர் எதிர்நோக்கும் வாழ்வு, பரந்து விரிந்த கண்ணோட்டம் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதே வேளையில், முன்னோர் வகுத்துள்ள நன்னெறி விழுமியங்களை சார்ந்திருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

வாழ்வை, நேரிய வழிமுறைகள் கொண்ட ஒரு விளையாட்டாகக் கருதவேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடையும் சூழலை எதிர்கொண்டு, நம் விளையாட்டைத் தொடரவேண்டும் என்றும், டெக்ஸ்சாஸ் மாநில இளையோருக்கு திருத்தந்தை அறிவுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.