2016-07-27 14:32:00

அன்னையின் ஆசியோடு திருத்தூதுப் பயணம் துவக்கிய திருத்தந்தை


ஜூலை,27,2016. "கிரக்கோவ் நகரில், உலக இளையோர் நாளை நாம் இணைந்து வாழ்வோம்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 27ம் தேதி, புதனன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

இப்புதன் மதியம் 1.30 மணிக்கு வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்டத் திருத்தந்தை, உரோம் நகரின் பியூமிசினோவில் (Fiumicino) அமைந்துள்ள லியோனார்தோ தா வின்சி விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரம் 2 மணியளவில் போலந்து நாட்டை நோக்கி தன் திருத்தூதுப் பயணத்தைக் துவக்கினார்.

இதற்கு முன்னதாக, இப்புதன் காலை 10 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் அமைந்துள்ள புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் கல்லறைக்குச் சென்று சிறிது நேரம் செபித்தபின், Peter Pan என்ற குழந்தைகள் நல அமைப்பினால் பராமரிக்கப்படும் நோயுற்ற குழந்தைகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தார்.

மேலும், ஜூலை 26, இச்செவ்வாய் மாலை, 7 மணியளவில், உரோம் நகரின் மையத்தில் அமைந்துள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்திற்குச் சென்று அன்னையின் ஆசீரைப் பெற்றுத் திரும்பினார் திருத்தந்தை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்திற்குச் சென்று, அன்னையின் திரு உருவத்திற்கு முன் செபிப்பதை தன் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.