2016-07-27 16:15:00

Auschwitz வதை முகாமில், திருத்தந்தையின் மௌன செபம்


ஜூலை,27,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Auschwitz வதை முகாமில், செபிப்பதற்குச் செல்கிறார்; மனிதர்கள் தங்கள் அயலவருக்கு என்ன செய்துள்ளனர் என்பதை எண்ணி, படைத்தவர் முன் கண்ணீர்விடச் செல்கின்றார் என்று, ஆர்ஜென்டீனா நாட்டின் யூத மதத் தலைவரும், திருத்தந்தையின் நெருங்கிய நண்பருமான Abraham Skórka அவர்கள் ஒரு செய்தித்தாள் கட்டுரையில் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போலந்து நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின் போது, Auschwitz வதை முகாமில் அமைதியாக செபிக்கச் செல்கிறார் என்பதைக் குறித்து, Skórka அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தை அவர்கள், 2010ம் ஆண்டு புனித பூமியில் பயணம் மேற்கொண்ட வேளையில், எருசலேமின் Yad Vashem மையத்தில் அளித்த செய்தியில், வதை முகாம்கள் குறித்து தான் சொல்லவேண்டியவற்றை தெளிவாகக் கூறியுள்ளார் என்று, Skórka அவர்கள், இக்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

யூத மதத் தலைவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பலர் Auschwitz வதை முகாமில் இறந்தோரைப் பற்றி குறிப்பிடும்போது, அவர்கள் அனைவரும் மௌனத்தின் மறைசாட்சிகள் என்று கூறியுள்ளனர் என்பதை, Skórka அவர்கள், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆரோனின் புதல்வர்கள் இறந்தபோது, ஆரோன் மௌனமாயிருந்தார் (லேவியர் 10:3) என்பதையும், யோபுவின் துன்பங்களைக் கண்ட நண்பர்கள் அவர் முன் ஏழு நாட்கள் மௌனம் காத்தனர் (யோபு 2:13) என்பதையும் யூத மதத் தலைவர் Skórka அவர்கள், தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

Auschwitz வதை முகாமில் திருத்தந்தை மௌனம் காப்பது, விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வழி முறையே என்று அறிஞர் Skórka அவர்கள், 'Auschwitzன் மௌனம்' என்ற தலைப்பில் எழுதிய தன் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.