2016-07-26 16:03:00

பிரெஞ்ச் அருள்பணியாளரின் கொலை குறித்து திருப்பீடம் கவலை


ஜூலை,26,2016. பிரான்ஸ் நாட்டின் Rouen நகர் கோவில் ஒன்றில், இச்செவ்வாய்க்கிழமை காலை, அருள்பணியாளர் ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழ்ந்த கவலையை வெளியிட்டதாக திருப்பீட தகவல் துறை இயக்குனர் தெரிவித்தார்.

86 வயதான அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள், இரு மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளது குறித்து செய்தி வெளியிட்ட திருப்பீட தகவல் துறை இயக்குனர் அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், திருத்தந்தைக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வன்முறையை கண்டித்துள்ள திருத்தந்தை, இறந்த அருள்பணியாளருக்காகவும், இத்தாக்குதலில் காயமடைந்தோருக்காகவும் செபிப்பதாகத் தெரிவித்தார்.

புனிதத் தலமான ஒரு கோவிலில் இடம்பெற்றுள்ள இந்தக் கொலை குறித்து திருப்பீடம் வன்மையாக கண்டிப்பதாகக் கூறிய திருப்பீட தகவல்துறை இயக்குனர் இயேசு சபை அருள்பணியாளர் லொம்பார்தி அவர்கள், இந்நேரத்தில் பிரான்ஸ் திருஅவையுடனும் அந்நாட்டு மக்களுடனும் திருப்பீடம் தன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கிறது என மேலும் கூறினார்.

மேலும், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்களும், தற்போது போலந்தில் இளையோர் மாநாட்டில் பங்குகொள்ளச் சென்றிருக்கும் Rouen பேராயர் Dominique Lebrun அவர்களும், தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தந்திச் செய்திகள் வழியாக வெளியிட்டுள்ளனர்.

பிரான்சின் வடக்கிலுள்ள Rouen நகர் கோவிலினுள் திருப்பலி வேளையில் நுழைந்த ஆயுதம் தாங்கிய இருவர், அங்கிருந்த அருள்பணியாளர் Jacques Hamel அவர்களையும், அவருடன் 4 பேரையும் பிணையக் கைதிகளாக எடுத்துச் செல்ல முனையும் வேளையில், காவல்துறை வந்ததால், அருள்பணியாளரைக் கொன்றனர். அருள்பணியாளரைக் கொன்ற இருவரும் கொல்லப்பட்டனர் என்றும், சிலர் காயமுற்றுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.