2016-07-26 16:19:00

உலகை மாற்றியமைக்கும் மதிப்பீடுகளை எடுத்துச் செல்லும் இளையோர்


ஜூலை,26,2016. இறையன்பின் மகிழ்ச்சி நிறை அறிவிப்பாளர்களாக செயல்பட்டு, மனித வாழ்வின் பாதுகாப்பாளர்களாகவும், நன்னெறி மதிப்பீடுகளை எடுத்துச் செல்பவர்களாகவும் இளையோர் விளங்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்திய ஆயர் ஹென்றி டி சூசா.

போலந்தில் இடம்பெறும் உலக இளையோர் தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் இந்திய குழுவின் தலைவராகச் சென்றுள்ள இந்திய ஆயர் பேரவையின் இளையோர் அவைத் தலைவர், ஆயர் டி சூசா அவர்கள், இன்றைய உலகை மாற்றியமைக்க உதவும் நன்னெறி மதிப்பீடுகளை முன்னெடுத்துச்செல்வதே, இளையோர் எதிர்நோக்கும் சவால் என்றார்.

இயேசுவின்  இரக்கம் குறித்துக் கூறும் இயேசுவின் உவமைகள் அனைத்தும், தெய்வீக இரக்கம், முன்நிபந்தனையற்றது, அளவற்றது மற்றும் முடிவற்றது என்பதை வலியுறுத்தி நிற்கின்றன என போலந்தின் Sosnowic ஆலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர் டி சூசா அவர்கள், எவ்வித இன, மத, நிற வேறுபாடுகளும் இன்றி, அனைத்து மனிதர்களின் மாண்பை ஊக்குவிப்பது, இளையோரின் கடமையாக உணரப்பட வேண்டும் என்றார்.

ஏழைகளின் தேவை குறித்த உணர்வு, வளர்ச்சியை ஊக்குவித்தல், இயற்கையைப் பாதுகாத்தல், வருங்காலத்திற்குப் பொறுப்பேற்பு, நன்னெறி மதிப்பீடுகளின் அடையாளமாக இருத்தல் போன்றவற்றில் இளையோர் தங்களை ஈடுபடுத்தவேண்டிய அவசியத்தையும் ஆயர் டி சூசா அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

எல்லா மத நம்பிக்கையாளர்களையும் ஒன்றிணைக்கும் பாலங்களைக் கட்டியெழுப்புவது, இளையோரின் கைகளிலேயே உள்ளது என்பதையும் எடுத்துரைத்தார், இந்திய ஆயர் பேரவையின் இளையோர் அவைத் தலைவர் ஆயர் டி சூசா.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.