2016-07-26 15:27:00

இது இரக்கத்தின் காலம் : 'நீ வருவேன்னு எனக்குத் தெரியும்'


போர்வீரர்கள் இருவர் நெருங்கிய நண்பர்கள். தங்கள் இராணுவப் பணியில் உயிர் நிலையற்றது என்பதை ஒவ்வொரு நாளும் பார்த்து வந்ததால், அவர்கள் நட்பு ஆழப்பட்டது. ஒருமுறை நடைபெற்ற போரில், தங்கள் முகாமிலும், எதிரி முகாமிலும் ஏகப்பட்ட உயிர் இழப்புகள். ஒரு நாள் மாலை, அன்றைய போர் முடிந்து முகாம் திரும்பிய வீரர், தன் நண்பன் திரும்பாததை உணர்ந்தார். தளபதியிடம் சென்று: "சார், என் நண்பன் திரும்பவில்லை. நான் மீண்டும் போர்க்களம் செல்கிறேன்" என்றார். அன்றையப் போரில் பலரை இழந்த வேதனையிலும், வெறுப்பிலும் இருந்தார் தளபதி. "ஏற்கனவே, பலரை நான் இன்று இழந்துவிட்டேன். உன் நண்பன் இந்நேரம் இறந்திருப்பான். நீ போவது வீண்" என்றார்.

தளபதி சொன்னதைக் கேளாமல், வீரர் மீண்டும் போர்க்களம் சென்றார். இரண்டு மணி நேரம் கழித்து, தன் நண்பனின் இறந்த உடலைச் சுமந்தபடி, இவரும் இன்னும் பல இடங்களில் அடிபட்டு, முகாமுக்குத் திரும்பினார். அவரைக் கண்டதும், தளபதிக்குக் கோபம் தலைக்கேறியது. "முட்டாளே, நான் ஏற்கனவே சொன்னேனே... கேட்டாயா? உன் நண்பனின் சடலத்தைப் பார்க்கப் போய் நீயும் சாக வேண்டுமா? அங்கு போனதால் என்ன சாதித்தாய்?" என்று தளபதி கத்தினார்.

"நான் போனபோது என் நண்பன் உயிரோடுதான் இருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் கண்களைத் திறந்து 'நீ எப்படியும் என்னைத் தேடி வருவேன்னு எனக்குத் தெரியும்' என்று சொன்னான். இதைச் சொன்னபிறகு அவன் உயிர் பிரிந்தது" என்று சொன்னார், அந்த வீரர்.

உண்மை அன்பின், நட்பின் ஆழத்தை உணர்ந்து பார்க்க, இரக்கத்தின் காலம் நல்லதொரு தருணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.