2016-07-23 14:46:00

பெண்கள் ஆழ்தியான சபைகளில் புதியவர்களைச் சேர்ப்பது பற்றி...


ஜூலை,23,2016. ஆழ்தியான துறவு சபைகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே, மற்ற நாடுகளிலிருந்து அச்சபைகளுக்கு பெண்களைச் சேர்ப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இந்த எச்சரிக்கை குறித்து விளக்கிய பேராயர் ஹோசே ரொட்ரிகெஸ் கர்பாலோ அவர்கள், வேறு நாடுகளிலிருந்து இச்சபைகளில், வந்து சேரும் விருப்பநிலையினருக்குக் கதவை அடைக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல, ஆனால் அவ்வாறு சேர்க்கும்போது, சரியான தேர்ந்து தெளிதல் அவசியம் என்பதே திருத்தந்தையின் எண்ணம் என்றார்.

“Vultum Dei quaerere”, அதாவது “கடவுளின் திருமுகத்தைத் தேடல்” என்ற தலைப்பில், பெண்கள் ஆழ்தியான துறவு சபைகளுக்கென திருத்தந்தை எழுதியுள்ள புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தை, இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசிய, துறவிகள் பேராயத்தின் செயலர் பேராயர் கர்பாலோ அவர்கள் இவ்வாறு விளக்கினார்.

ஓர் ஆழ்தியான சபை, மற்ற கண்டங்களிலிருந்து இறையழைத்தல்களைக் கேட்கும்போது, இதை எதற்காகச் செய்கிறேன்? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும் என்றும், அச்சபை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் கேட்பது, நற்செய்தி அறிவுரைப்படி நியாயப்படுத்தப்பட முடியாதது என்றும் கூறினார் பேராயர் கர்பாலோ.

அதேநேரம், இச்சபைகளில் சேருவதற்காக, வேறு கண்டங்களிலிருந்து செல்லும் பெண்களும், நான் ஏன் செல்கிறேன்? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும் என்றும் கூறிய பேராயர் கர்பாலோ அவர்கள், இந்த இரண்டு கேள்விகளும், பல விடயங்களைத் தெளிவுபடுத்தும் என்றும் விளக்கினார்.

புதிதாகச் சபைகளில் சேருபவர்க்கு, உருவாக்கும் பயிற்சியளித்தல் அல்லது, சபைகளை மூடுவதற்கு எடுக்கப்படும் தீர்மானங்களில் ஏற்படும் பாதிப்பு போன்றவைகளில், இச்சபைகள் ஒன்றோடொன்று ஒத்துழைக்குமாறும், கூட்டமைப்புகளை உருவாக்குமாறும்,  Vultum Dei quaerere திருத்தூது கொள்கை விளக்கத்தில், திருத்தந்தை கேட்டுள்ளார்  என்றும் கூறினார் பேராயர் கர்பாலோ.

66 ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள் இச்சபைகளுக்கென வெளியிட்ட "Sponsa Christi" என்ற திருத்தூது கொள்கை விளக்கத்தில் உள்ள சட்டமுறையான இடைவெளிகளை நிரப்பும் விதமாக, Vultum Dei quaerere புதிய திருத்தூது கொள்கை விளக்கம் அமைந்துள்ளது என்றும் பேராயர் தெரிவித்தார். 38 பக்கங்கள் கொண்ட இப்புதிய கொள்கை விளக்கத்தில், 14 புதிய தலைப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர், ஏறத்தாழ நான்காயிரம் ஆழ்தியான துறவு இல்லங்களுக்கும் கேள்விகள் அனுப்பப்பட்டு, கிடைத்த பதில்களிலிருந்து இப்புதிய விளக்கம் வெளிவந்துள்ளது என்பதையும் அறிவித்தார் பேராயர் கர்பாலோ.

இரண்டாயிரமாம் ஆண்டில், 48 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்த பெண் ஆழ்தியான சபையினர், 2014ம் ஆண்டில் 39 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தனர் என்றும் அவர் கூறினார்.

இச்சபைகளின் அருள்சகோதரிகள், ஐரோப்பாவில் 23 ஆயிரத்திற்கு அதிகமாகவும், அமெரிக்காவில், எட்டாயிரத்துக்கு அதிகமாகவும்  உள்ளனர். ஏழைக் கிளாரா, கர்மேல், பெனடிக்ட் ஆகிய மூன்று சபைகளுமே அதிகமான எண்ணிக்கையில் அருள்சகோதரிகளைக் கொண்டிருக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.