2016-07-23 15:30:00

சவுதியில் வேலை இழக்கும் குடியேற்றதாரர்க்கு உதவ அழைப்பு


ஜூலை,23,2016. சவுதி அரேபியாவில் வேலைகளை இழக்கும் பிலிப்பைன்ஸ் குடியேற்றதாரப் பணியாளர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை எடுக்குமாறு, அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார் பிலிப்பைன்ஸ் ஆயர் ஒருவர்.

தங்கள் குடிமக்கள், வெளிநாடுகள் சென்று வாழ்வுக்காக உழைப்பது சரியானது என்பது இல்லாவிடினும், அவ்வாறு செல்பவர்களின் உரிமைகளுக்கும், நல்வாழ்வுக்கும் அரசு உறுதியளிக்க வேண்டுமென்று,  பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழு தலைவர் ஆயர் ருபெர்த்தோ சாந்தோஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பிலிப்பைன்ஸ் தொழில் அமைச்சகர் சவுதி அரேபியா சென்றுள்ள இவ்வேளையில், இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு, அவ்வமைச்சகச் செயலர் சில்வெஸ்டர் பெல்லோ அவர்கள் முயற்சிகள் எடுப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார் ஆயர் சாந்தோஸ்.

சவுதி அரேபியாவில், ஒரு பீப்பாய் எண்ணெய், 100 டாலரிலிருந்து, 30 டாலராக இவ்வாண்டில் குறைந்துள்ளவேளை, அந்நாடு, 2009ம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக, வரவுசெலவில் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.