2016-07-22 14:45:00

திருத்தந்தை ஆழ்தியானச் சபைகளிடம்:நீங்கள் திருஅவைக்குத் தேவை


ஜூலை,22,2016. “Vultum Dei quaerere”, அதாவது “கடவுளின் திருமுகத்தைத் தேடல்” என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்கள் ஆழ்தியானச் சபைகளுக்கென எழுதியுள்ள புதிய திருத்தூது கொள்கை விளக்கம் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

பெண்கள் ஆழ்தியானச் சபைகளில், போதுமான உருவாக்கப் பயிற்சியை ஊக்குவித்தல், செபம் மற்றும் இறைவார்த்தை, குறிப்பாக, lectio divinaவின் முக்கியத்துவம், ஆழ்தியானச் சபைக் இல்லங்களின் தன்னாட்சிக்கான குறிப்பிட்ட கூறுகள், இச்சபைகளின் கூட்டமைப்புகளில், தனிப்பட்ட இல்லங்களின் உறுப்பினர்நிலை போன்ற முக்கிய கூறுகள், இப்புதிய கொள்கை விளக்கத்தில் கூறப்பட்டுள்ளன. 

இப்புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தின் முன்னுரையில், இது வெளியிடப்படுவதன் நோக்கம் பற்றியும் விளக்கியுள்ள திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்ற கடந்த ஐம்பது ஆண்டுகளில், மனித வரலாற்றில் ஏற்பட்டுள்ள வெகுவேக முன்னேற்றம், அதில் திருஅவை மேற்கொண்டுள்ள பயணம் போன்றவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மௌனம், கவனமுடன் கேட்டல், அகவாழ்வுக்கு அழைப்பு, உறுதியான தன்மை ஆகிய ஆழ்தியானச் சபைகளின் அடிப்படை விழுமியங்களைக் கைவிடாமல், இக்கால சமுதாயத்தோடு உரையாடல் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. 

ஆழ்தியானச் சபைகளின் வாழ்வுமுறை, இக்காலத்திய மனப்போக்குகளுக்குச்  சவாலாக இருக்க முடியும் மற்றும் சவாலாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, உலகுக்கும், திருஅவைக்கும், ஆழ்தியான வாழ்வு முறையும், இவ்வாழ்வு வாழும் அருள்சகோதரிகளும் எவ்வளவு தேவைப்படுகின்றனர் என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

12 தலைப்புகளில் சிந்தனைகள் வழங்கப்பட்டுள்ள இதில், இறையழைத்தல் பற்றிய தேர்ந்து தெளிதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

துறவிகள் பேராயத்தின் செயலர் பேராயர் José Rodríguez Carballo அவர்கள், இதனை பத்திரிகையாளர் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.