2016-07-22 14:45:00

இது இரக்கத்தின் காலம்...: எதையும் சுய உணர்வோடு ஆற்று


ஞானி நாகார்ஜுனா, தினமும் பிச்சையெடுத்து உணவருந்துவது வழக்கம். அவர் மீது பக்தி கொண்டிருந்த அந்நாட்டு அரசி, அவருக்கு தங்கத்தால் ஆன ஒரு பிச்சைப் பாத்திரத்தை வழங்கினார். அதன்பின் அதிலேயே அவர் பிச்சை வாங்கி வந்தார். ஒருநாள் ஒரு திருடன், பாத்திரத்தைப் பார்த்து, எப்படியும் திருடிவிடுவது என்று எண்ணி அவரைப் பின் தொடர்ந்தான். திருடனைப் பார்த்த அவர், அவனுடைய எண்ணம் அறிந்து, அப்பாத்திரத்தை, அவன் இருந்த பக்கம் எறிந்தார். திருடனால் இதை நம்ப முடியவில்லை. அவன் அவரிடம் வந்து, தங்கப் பாத்திரத்தை அவரிடம் திரும்பக் கொடுத்தான். அதற்கு அவர், அதை அவனுக்கு ஏற்கனவே பரிசாக அளித்து விட்டதாகக் கூறினார். திருடன் நம்ப முடியாமல், ''இதனுடைய விலை என்ன தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு அவர் சொன்னார், ''நான் என்னை அறிந்து வைத்திருப்பதால், வேறு எதுவும் எனக்கு விலை உயர்ந்த பொருளாகத் தெரியவில்லை,'' என்று. உடனே திருடன், ''நான் என்னை எப்படித் தெரிந்து கொள்வது?'' என்று கேட்டான். அதற்கு அவர், ''திருடும்போது சுய உணர்வோடு, எச்சரிக்கையோடு, கவனத்தோடு இரு,'' என்றார். அதன்பின், திருடன் இரண்டு முறை திருட முயற்சி செய்தான். ஆனால், அவன், ஞானி சொன்னதுபோல சுய உணர்வோடு இருந்ததால், செல்வம் எதையும் திருட அவனுடைய மனம் இடம் கொடுக்கவில்லை. கடைசியாக, வெறுங்கையோடு நாகார்ஜுனாவிடம் வந்து, அவருடைய சீடனானான். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.