2016-07-20 15:49:00

ஐ.நா.வில் வெளிப்படையான வழிமுறைகள் தேவை - பேராயர் அவுசா


ஜூலை,20,2016. போர் மற்றும் மோதல்களின் பாதிப்புக்களிலிருந்து, மக்களைக் காப்பதற்கு ஐக்கிய நாட்டு பாதுகாப்பு அவை மேற்கொண்டு வரும் முயற்சிகளை திருப்பீடம் பாராட்டுகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூ யார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொது அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளும் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. பாதுகாப்பு அவையின் அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

"ஐ.நா. பாதுகாப்பு அவையின் செயல்பாட்டு வழிமுறைகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமர்வில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், பாதுகாப்பு அவை, தன் செயல்பாடுகளில் இன்னும் வெளிப்படையான வழிமுறைகளைக் கொணரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இனப்படுகொலை, மனித சமுதாயத்திற்கு எதிரான கொடுமைகள் போன்ற விவாதங்களில் வாக்களிப்பு நடைபெறும் வேளையில், உறுப்பினர் நாடுகள் நீதியான முடிவுகள் எடுப்பதற்குத் தடையாகச் செயல்படுவதை நிறுத்தவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

வெளிப்படையாகத் தெரியும் கொடுமைகளை, உறுப்பினர் நாடுகள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, வேறுபட்ட பொருள் தந்து, ஐ.நா.அவை தகுந்த முடிவுகள் எடுப்பதற்கு தடையாக இருக்கக்கூடாது என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

தன் வரலாற்றில் 71 ஆண்டுகளைக் கடந்துள்ள ஐ.நா. அவை, இன்னும் வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்ற துணிவு பெறவேண்டும் என்றும், குறிப்பாக, ஐ.நா.அவையின் அடுத்த பொதுச் செயலரின் தேர்தலில், வெளிப்படையான நடைமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.