2016-07-19 15:38:00

இரக்கத்தின் பாதை, வருங்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகிறது


ஜூலை, 19,2016. இத்தாலியின் பொலோஞ்ஞா நகரில் இடம்பெறும் தொமினிக்கன் துறவு சபையின் பொதுப் பேரவைக்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இந்த இறைவார்த்தை போதகர் சபை தோற்றுவிக்கப்பட்டதன் 800ம் ஆண்டுக்கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துக்களுடன், இந்த இரக்கத்தின் ஆண்டு கற்பிக்கும் முக்கிய செய்தியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இரக்கம் இல்லையெனில், திருஅவையின் நம்பகத்தன்மையே சந்தேகத்திற்கு உள்ளாகும் என உரைக்கும் திருத்தந்தையின் செய்தி, இரக்கமும் அன்பும் நிறைந்த பாதையே, புதிய வாழ்வை வழங்குவதுடன், வருங்காலம் குறித்த நம்பிக்கையையும் தருகிறது என தெரிவிக்கிறது.

இறையருள், மன்னிப்பு, ஏழைகள் மீதான அன்பு, உண்மையைப் பாதுகாத்தல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்த புனித தோமினிக்கின் பாதையை பின்பற்றும் அனைவரும், சமூகத்தில் ஒருமைப்பாடும், அன்பும், மன்னிக்கும் மனப்பான்மையும் வளர உதவ வேண்டும் எனவும் திருத்தந்தையின் செய்தி அழைப்பு விடுக்கிறது.

இறைவார்த்தையை அறிவிப்பதற்கென  இஸ்பானிய அருள்பணியாளர் புனித‌ Dominic de Guzman அவர்களால் பிரான்சில் துவக்கப்பட்ட தொமினிக்கன் துறவு சபை,  1216ம் ஆண்டின் இறுதியில் திருப்பீடத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.