2016-07-19 15:39:00

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்த அரசுத்தலைவர் உறுதி


ஜூலை, 19,2016. நாட்டில் தமிழர்களின் பிரச்சனைகளக்குத் தீர்வு காண்பதன் வழியாகவே,  சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியும் என அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் தன் அண்மை  யாழ்ப்பாண  சந்திப்பின்போது  தெரிவித்தார்.

கிளிநொச்சியில், ஜெர்மானிய அரசின் நிதியுதவியுடன் 80 இலட்சம் அமெரிக்க டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை, ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றிய அரசுத்தலைவர் மைத்திரி பால சிறிசேன அவர்கள், நாட்டில் வாழும் அனைத்து இன, மத மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய சமுதாயக் கடமையை வலியுறுத்தினார்.

அனைத்து மக்களிடையிலும் ஒன்றிணைந்த வாழ்வு உருவாக்கப்படும்போதுதான், சிங்கள மக்கள் இலங்கையில் மகிழ்ச்சியாக வாழ முடியும் எனவும் எடுத்துரைத்த அரசுத் தலைவர், வடபகுதி மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்வதே, பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல் வழியாகும் என்றார்.

அரசுத்தலைவர் தேர்தலின்போது வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என மேலும் கூறினார், இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.