2016-07-18 15:52:00

வாரம் ஓர் அலசல் – நல்ல உள்ளங்கள்போன்று வாழ்ந்தால்..


ஜூலை,18,2016. அன்பு நேயர்களே, கடந்த ஓரிரு நாள்களில் வெளிவந்த உலக செய்திகளில் ஒருசிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொண்டு இன்றைய அலசலைத் தொடங்குகின்றோம். குவைத், வீடுகளில் வேலை செய்யும் பணியாளர்க்கு உரிமைகளை  வழங்கும் முதல் வளைகுடா நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 1970களில் குவைத் நாட்டில் எண்ணெய் வளம் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து வெளிநாடுகளிலிருந்து வேலைக்குச் செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. அதேநேரம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கும் அந்நாடு உள்ளானது. ஆயினும், தற்போது அந்நாட்டு உள்துறை அமைச்சர் Sheikh Mohammad Khaled Al-Sabah அவர்கள், வீட்டுப் பணியாளர்களுக்கென வெளியிட்டுள்ள புதிய தொழில் விதிமுறைகளால், மனித உரிமைகள் வாட்ச் (HRW) என்ற அமைப்பின் பாராட்டையும் அந்நாடு பெற்றுள்ளது. பிற வளைகுடா நாடுகள் குவைத்தைப் பின்பற்றுமாறும் அந்த அமைப்பு கேட்டுள்ளது. குறைந்த மாத ஊதியம் அறுபது தினார்கள், ஊதியத்தோடு ஆண்டுக்கு முப்பது நாள்கள் விடுமுறை, 12 மணி நேரம் வேலை, கூடுதலாக வேலைசெய்பவர்க்கு மேலும் ஊதியம் போன்ற உரிமைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று ஊடகச் செய்திகள் கூறின. வளைகுடா நாடுகளில், வீட்டுவேலை செய்யும் 24 இலட்சம் பணிப்பெண்களில் ஆறு இலட்சம் பேர், குவைத்தில் பணியாற்றுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இரு சிறுபான்மை மதங்களின் இரு உறுப்பினர்களை, அவர்களின் இனத் தலைவர்கள் என்று, பாகிஸ்தான் அரசு முதன்முறையாக ஏற்றுள்ளது. ஒரு சீக்கியர் மற்றும் ஒரு கிறிஸ்தவர்க்கு, பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக இப்படி ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் வாழும் பழங்குடியினத்தவர் பகுதியில், Gormeet Singh என்ற ஒரு சீக்கியர், Wilson Wazir Masih என்ற ஒரு கிறிஸ்தவர் ஆகிய இருவரும், அவரவர் சமூகங்களின் தலைவர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன் வழியாக, இவர்கள் இருவரும், அவர்கள் சமூகங்களின், ஏறத்தாழ முப்பதாயிரம் பேரின் சமூக, கல்வி மற்றும் நலவாழ்வு உரிமைகளுக்காக அரசை வலியுறுத்த உரிமை பெறுகிறார்கள். இவர்கள் இருவரும் ‘மாலிக்(malik)’அதாவது இனத்தலைவர் என பெயர் பெறுகின்றனர். 

மியான்மார் நாட்டில், பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களால் துன்புறுத்தப்பட்டுவந்த சிறுபான்மை இன சமூகங்களுக்கு, தற்போதைய மியான்மார் புதிய அரசு நம்பிக்கையாக உள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.  1947ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த Panglong கருத்தரங்கிற்குப் பின்னர், அந்நாட்டின் Bamar பெரும்பான்மை இனத்தவரோடு தங்களுக்கும் சம உரிமை கிடைக்கும் என, பிற சிறுபான்மை இனச் சமூகங்கள் எதிர்பார்த்தன. ஆனால் இதுவரை அவ்வின மக்கள் எதிர்பார்த்து ஏங்கியது கிடைக்கவில்லை. ஆயினும், அது கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது மீண்டும் துளிர்விட்டுள்ளது. மியான்மாரில், ஏறத்தாழ 135 இனக் குழுக்கள் உள்ளன. இவர்களுக்கு ஓர் அமைதியான நல்லிணக்க வாழ்வு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது, குறிப்பாக, Bamar இனத்தவரால் ஆதிக்கம் செலுத்தப்படும் மத்திய அரசால் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதல் முறையாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில், மகிழ்ச்சிக்கென தனி அமைச்சகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய அமைச்சகம் பற்றி அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்(Shivraj Singh Chouhan) அவர்கள், போபாலில் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியிருக்கிறார். மனித வாழ்க்கையில், உணவு, உடை, உறைவிடம், கல்வி, நலவாழ்வு போன்றவை அடிப்படைத் தேவைகளாகும். இவற்றையும் தாண்டி, வாழ்க்கை மீதான பிடிப்பு, திருப்திநிலை போன்ற மக்களின் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைய உள்ளன. வழக்கமாக, ஒரு மாநிலத்தின் செழிப்புக்கு, பொருளாதார வளர்ச்சியை மட்டுமே அளவுகோலாகக் கருத முடியாது. எனவே, மக்களின் மகிழ்ச்சிக்கென புதிய துறையை உருவாக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்தது. மக்களின் மகிழ்ச்சி நிலையை அதிகப்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளுடன் இணைந்து, புதிய கொள்கைகளையும், கோட்பாடுகளையும், இப்புதிய துறை ஏற்படுத்தும். இதைச் சார்ந்து, பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ள இத்துறைக்கு மூன்று கோடியே எண்பது இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அன்பு இதயங்களே, இப்படி நம்பிக்கையளிக்கும் நல்ல செய்திகளுக்கு மத்தியில், கொலைகள், கடத்தல்கள், பேரிடர்கள் போன்ற செய்திகளும் தினம் தினம் நிறைய நடக்கின்றன. உங்களுக்கெல்லாம் தெரியும், கடந்த வியாழன் இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நடந்த பயங்கரவாதச் செயல் பற்றி. தேசிய விழாக்கொண்டாடிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அதிவேகமாக கனரக லாரியை ஓட்டிய நபரை மனித இனத்தோடு எப்படி சேர்ப்பது? இதில் பலியானவர்களுக்காக, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “இந்தப் படுகொலையால் ஏற்பட்ட வேதனை, இன்னும் நம் இதயங்களைவிட்டு அகலவில்லை. பயங்கரவாதம் மற்றும் மரணத்தின் ஒவ்வொரு திட்டத்தையும், நம் நல்ல இறைத்தந்தை, கலைத்துவிடுவாராக. அதன் வழியாக, மனிதர், தன் சகோதரரின் இரத்தத்தைச் சிந்தும் முயற்சியில் இனிமேல் ஈடுபடமாட்டார்”என்று கூறினார்.

அன்பர்களே, இந்தச் சோகம் முடிவதற்குள், துருக்கி நாட்டில் இச்சனிக்கிழமை இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில், 290 பேர் இறந்துள்ளனர். தோல்வியடைந்துள்ள இந்நடவடிக்கையில், ஆறாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், ஏறக்குறைய எட்டாயிரம் காவல்துறையினர் பணியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பேட்டன் ரூஜ் பகுதியில், அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் மீது கருப்பினத்தைச் சேர்ந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஞ்ஞாயிறன்றும், மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு கொலை நாடாக மாறி அச்சமூட்டுகிறது, ஒரே நாளில் 10 கொலைகள் என்ற செய்திகள் கவலையளிக்கின்றன. முன்பகை, காதல், சொத்து, குடும்பத் தகராறு, பாலியல், பழிக்குப்பழி, வெறித்தனம் போன்ற காரணங்களால் இவை நிகழ்கின்றன. திருட்டு, வழிப்பறி, பழிக்குப்பழிக் கொலைகள், ஆணவக்கொலைகள், கூலிப்படைக் கொடூரங்கள் போன்றவை சர்வசாதாரணமாக நிகழ்த்தப்படுகின்றன. உயர்நீதிமன்றத்துக்குள் வைத்து, வழக்கறிஞர் வெட்டப்படுகிறார்; காவலில் இருக்கும் காவல்துறை அலுவலகர்க்கு மண்டை உடைகிறது; பட்டப்பகலில் இரயில் நிலையம், பேருந்து நிலையம், நெரிசல் மிகுந்த வீதிகளில் வைத்து, மனித உடல்கள் பயங்கர ஆயுதங்களால் குத்திக் குதறப்படுகின்றன. தமிழகத்தின் இப்போதைய நிலை இது.

அன்பு நேயர்களே, ஒவ்வொரு நாளும் நல்லது செய்பவர்களையும், தீயது செய்பவர்களையும் மாறி மாறிச் சந்திக்கிறோம். ஜூலை 18, இத்திங்களன்று ஐக்கிய நாடுகள் நிறுவனம், நெல்சன் மன்டேலா உலக நாளை சிறப்பித்தது. சுதந்திர வாழ்வுக்கும், அமைதிக் கலாச்சாரத்திற்கும் இவர் ஆற்றிய அரும்பணிகளை மதிக்கும் விதமாக, 2009ம் ஆண்டு நவம்பரில், ஐ.நா. பொது அவை இந்த உலக நாளை அறிவித்தது. கறுப்பு காந்தி என அழைக்கப்படும் நெல்சன் மன்டேலா அவர்கள், 67 ஆண்டுகள், தனது வாழ்வை மனித சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்திருந்தார். இதனால் இந்த நாளில், நெல்சன் மன்டேலா அமைப்பு, 67 நிமிடங்கள், பிறருக்கு நன்மை புரிவதில் செலவழித்தது. மன்டேலா சொன்னார் : “வீழ்த்துவதும் அழிப்பதும் எளிது. ஆனால், அமைதியை ஏற்படுத்தி அதைக் கட்டியெழுப்புவர்களே வாழ்க்கை வீரர்கள்” என்று.

அன்பர்களே, வெற்றிபெறும் சாதனையாளர்கள் அனைவரும் இரு விடயங்களில் கவனமாக இருக்கிறார்கள். இவர்கள் தன்னம்பிக்கையில் நம்பிக்கையுடையவர்கள். அடுத்து, நேர்மையான பாதையில் செல்பவர்கள் என்று, நெப்போலியன் ஹில் சொன்னார். ஒவ்வொரு நாளும் நல்லதையும், தீயதையும் பார்க்கும் நாம், நல்லவர்களையும், அதற்கு மாறானவர்களையும் சந்திக்கும் நாம், நிச்சயமாக மேலும் மேலும் நல்லது செய்து, நல்லவர்களாகவே வாழத் தீர்மானிக்கிறோம் என்பது எம் நம்பிக்கை. நேர்மறையான எண்ணங்களை உள்வாங்கி, அதிலே வாழப் பழகுவோம். நேர்மறைச் சிந்தனைகளில் வாழ்வதென்பது, நல்லது நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் நம் நன்மைக்கே என்று ஏற்பதுமாகும் என்ற ஒரு சிந்தனை வாட்ஸ்ப்பில் வந்தது. ஒருவர் சந்தையில் ஒரு பாட்டியிடம் தினமும் ஆரஞ்சுப் பழங்கள் வாங்கினார். உடனே ஒரு பழத்தை உறித்து, ஒரு சுளையைச் சாப்பிட்டவுடன், இந்தப் பழம் புளிக்கிறது என்று பாட்டியிடம் புகார் சொல்லி பாட்டியைச் சாப்பிட்டு பார்க்கச் சொல்வார். இப்படி தினமும் நடந்தது. இதைக் கவனித்த அவரின் மனைவி, ஏங்க பழம் நல்லாத்தானே இருக்கு, அப்புறம் ஏன் பொய் சொல்றீங்க என்று ஒருநாள் கேட்டார். அதற்கு அவர், பழம் சுவையாகத்தான் இருக்கின்றது. அந்தப் பாட்டி பழங்களை விற்க மட்டுமே செய்கிறார், அவற்றில் ஒன்றைக்கூட சுவைக்க மாட்டார், அவரைச் சாப்பிட வைக்க வேண்டுமென்பதற்காகவே இப்படிச் செய்கிறேன் என்றார். தினமும் பாட்டியைக் கவனித்துவந்த பக்கத்து கடைக்காரர், அந்த ஆள் தினமும் புகார் சொல்றார், ஆனா, நீங்க தினமும் கூடுதலாகப் பழத்தை நிறுத்துக் கொடுக்கிறீங்களே என்று கேட்டார். அதற்குப் பாட்டி, என்னைப் பழம் சாப்பிட வைக்கவேண்டுமென்பதற்காக அந்த மனிதர் இப்படிச் செய்கிறார் என்பது எனக்குத் தெரியும். நான் கூடுதலாக பழத்தைக் கொடுக்கவில்லை, அன்பினால் தராசு சாய்கிறது என்றார். அன்பர்களே, இந்த நல்ல உள்ளங்கள்போன்று எல்லாரும் வாழ்ந்தால் இந்த உலகம் சொர்க்கப் பூமியாக மாறாதா....

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.