2016-07-18 16:16:00

மாற்றுத் திறனாளிகளும் ஒலிம்பிக் விளையாட்டுக்களும்


ஜூலை,18,2016. நெருங்கி வரும் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களை முன்னிட்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு பணியாற்றும் U.N.I.T.A.L.S.I. என்ற இத்தாலிய கத்தோலிக்கப் பிறரன்புப் பணி அமைப்பும், இத்தாலிய மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் கழகமும் இணைந்து, இஞ்ஞாயிறன்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

லூர்து மற்றும் ஏனைய திருத்தலங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்லும் UNITALSI அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும், இத்தாலிய மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் கழகத்தின் பிரதிநிதிகளுக்கும் மிலான் நகரில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரியோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் வேளையிலும், பின்னர் அதைத் தொடரும் மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் நாட்களிலும் மாற்றுத் திறனாளிகள் அந்த விளையாட்டுக்களைக் காண்பதற்கும், பங்கேற்பதற்கும் இவ்விரு அமைப்புக்களும் உதவிகள் செய்யவிருக்கின்றன.

சிறப்பான கருவிகள், மற்றும் வாகனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியால் மாற்றுத் திறனாளிகள் பெரிதும் பயனடைவர் என்று, UNITALSIயின் தலைவர், Victor de Carli அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.