2016-07-18 16:19:00

பிரான்ஸ் தாக்குதலில் உயிரழந்தவர்களுக்காக திருத்தந்தை செபம்


ஜூலை,18,2016. இம்மாதம் 14ம் தேதி பிரான்சின் Nice நகரின் தீவிரவாத தாக்குதலில் இடம்பெற்ற உயிரிழப்புகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், பிரான்ஸ் தாக்குதல் குறித்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை, இழப்புகளை அனுபவித்துள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும், பிரான்ஸ் நாடு முழுவதற்கும் தன் அருகாமையையும் ஒருமைப்பாட்டையும் அறிவிப்பதாகவும்,  சொந்த சகோதரர்களின் இரத்தத்தைச் சிந்த வைக்கும் இத்தகைய செயல்கள் இடம்பெறாதிருக்கும்படியாக, மக்கள் மனங்களில் மாற்றம் நிகழவேண்டும் என செபிப்பதாகவும் கூறினார்.

இத்தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக, அனைவரும் அமைதியில் செபிக்குமாறும் மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

பிரான்சின் சுதந்திர தினத்தைச் சிறப்பித்துக் கொண்டிருந்த மக்கள்மீது Nice நகரில் துனிசியா நாட்டைச் சேர்ந்த ஒருவர், கனரக வாகனம் ஒன்றை ஓட்டி, விபத்து ஏற்படுத்தியதில் 84பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

மேலும், 'கோடைகாலத்தில், பெரும்பாலும் தனிமை, மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் முதியோரை சிறப்பான விதத்தில் நினைவுகூர்வோம்' என, இஞ்ஞாயிறு டுவிட்டர் பக்கத்தில் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.