2016-07-18 16:26:00

சந்திக்கும்போது, கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்-திருத்தந்தை


ஜூலை,18,2016. இயேசு உங்களுக்காகக் காத்திருக்கிறார், அவர் ஒருவரையும் கைவிடுவதில்லை என்ற மையக்கருத்துடன் காணொளி செய்தி ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கூடியிருந்த இளையோருக்கு அனுப்பி வைத்தார்.

"Together 2016" என்ற பெயரில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர் வாஷிங்டனில், ஜூலை 16 இச்சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு இளையோர் கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியிருந்த காணொளிச் செய்தி ஒளிபரப்பப்பட்டது.

உலகில் நிகழும் பல்வேறு விடயங்கள் இளையோர் மனங்களில் கேள்விகளை எழுப்பி வந்துள்ளன என்றும், இளையோர், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, இந்தக் கேள்விகளுக்கு தகுந்த பதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

இஸ்பானிய மொழியில் திருத்தந்தை விடுத்திருந்த இச்செய்தியில், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, எனவே, துணிவுடன் ஒருவரை ஒருவர் சந்தித்து, உங்கள் கேள்விகளுக்கு விடை தேடுங்கள் என்று இளையோருக்கு அழைப்பு விடுத்தார்.

ஜூலை 16, இச்சனிக்கிழமை காலை முதல் மாலை வரை, வாஷிங்டன் தேசிய சதுக்கத்தில் நடைபெற்ற இளையோர் கூட்டத்தில், "இறைவா, இனவெறியை உடைத்தெறியும்" என்பது முக்கிய கருத்தாக பேசப்பட்டது என்று The Washington Post என்ற செய்தித்தாள் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.