2016-07-16 15:51:00

மகிழ்ச்சியை அதிகரிக்க முதல்முறையாக தனி அமைச்சகம்


ஜூலை,16,2016. மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை அதிகரிக்க, இந்தியாவிலேயே முதல்முறையாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில்  தனி அமைச்சகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, ஒரு மாநிலத்தின் செழிப்புக்கு, பொருளாதார வளர்ச்சியை மட்டுமே அளவுகோலாக கருத முடியாது என்றும், எனவே, மக்களின் மகிழ்ச்சிக்கான புதிய துறையை உருவாக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்தது என்றும், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்(Shivraj Singh Chouhan) அவர்கள், போபாலில் செய்தியாளர்களிடம் கூறினார்.

உணவு, உடை, உறைவிடம், கல்வி, நலவாழ்வு போன்றவை மனித வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளாகும் என்றும், இவற்றையும் தாண்டி, வாழ்க்கை மீதான பிடிப்பு, திருப்திநிலை போன்ற மக்களின் பல தேவைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைய உள்ளன என்றும், இவை மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். சிவராஜ் சிங்.

மக்களின் மகிழ்ச்சி நிலையை அதிகப்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளுடன் இணைந்து, புதிய கொள்கைகளையும், கோட்பாடுகளையும், இப்புதிய துறை ஏற்படுத்தும் என்றும், இதைச் சார்ந்து, பல்வேறு ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் போன்றவை மேற்கொள்ள இத்துறைக்கு ரூ.3.80 கோடி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கூறினார் சிவராஜ் சிங் சவுகான்.

ஆதாரம் : தினமணி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.