2016-07-15 16:17:00

உரையாடல் வழியாக தீர்க்கப்பட முடியாத விவகாரமே இல்லை


ஜூலை,15,2016. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு, அமைதி காக்கப்படுமாறு இந்திய கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த வாரத்தில், புரட்சிக்குழுத் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வன்முறையுடன்கூடிய எதிர்ப்புகள் இடம்பெறுவதால் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆயர்கள்.

உரையாடல் வழியாக தீர்க்கப்பட முடியாத விவகாரமே உலகில் இல்லை என்றுரைத்துள்ள இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் தெயதோர் மஸ்கரேனஸ்(Theodore Mascarenhas) அவர்கள், வன்முறையிலிருந்து எந்த ஒரு தீர்வும் வெளிவராது என்றும் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினர் அனைவரும், உரையாடல் மற்றும் கலந்தாலோசனை வழியாக, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு மேலும் கேட்டுள்ளார் ஆயர் மஸ்கரேனஸ்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இம்மாதம் 8ம் தேதி இந்தியப் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி அப்துல் புர்ஹன் வானி உள்பட தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அப்துல் புர்ஹன் வானி, 15 வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்து பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டு வந்தார். இவர் அந்த அமைப்பின் தளபதியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்கள் மூலமாக படித்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஹிஸ்புல் அமைப்பிற்கு ஆள்சேர்த்தும் வந்தார் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.